பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி. முத்துகுமாரன தெரிவு

65 0

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்துக்கு எஸ்.சி.முத்துகுமாரனவை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. எஸ்.சி.முத்துகுமாரன எதிர்வரும் வாரம் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

இலக்கம் 17 அனுராதபுரம் தேர்தல் தொகுதிக்காக 1981ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 62ஆவது உறுப்புரையின் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட உத்திக பிரேமரத்ன பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

அதனை தொடர்ந்து, அரசியலமைப்பின் 99(13)(ஆ) உப பிரிவுக்கு அமைய மற்றும் 1981ஆம் ஆண்டு 01ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 64(2) உறுப்புரைக்கு அமைய செயற்பட்டு அனுராதபுரம் தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி.முத்துகுமாரன தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த உத்திக பிரேமரத்ன கடந்த 26ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்திருந்தார்.

அதனை தொடந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1)ஆம் பிரிவின் பிரகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள உறுப்பினர் பதவிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பெயர் குறிப்பிட்டுள்ளது.