மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தமிழகத்திலிருந்து திமுக முற்றிலும் அகற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது: நெல்லை மக்கள் திருநெல்வேலி அல்வாவைப் போலஇனிப்பான மற்றும் இளகிய மனம்கொண்டவர்கள். தமிழக மக்கள்பாஜக மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜகவின் உண்மையான சமூக நீதி, நேர்மையான அரசியலை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக பாஜக நிறைவேற்றும். இது மோடியின் உத்தரவாதம்.
பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வெளிநாடுகளுடன் போட்டியிடுகிறது. தமிழ்நாடும் அதில் பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
பிற நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களை, வெளிநாட்டினர் பெருமையாகப் பார்க்கிறார்கள். மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதற்கு இதுவே சாட்சி. தமிழக மக்கள் பாஜகவின் பின்னால் வரத் தொடங்கியுள்ளனர். டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தூரம் மிகவும் குறைந்துள்ளது.மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவியுள்ளன.
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் கிராமப்புற வீடுகளில் 21லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் இருந்தன. இப்போது 1 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளோம். உஜ்வாலா திட்டத்தின் மூலம் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட இலவச எரிவாயு சிலிண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் திரளாக வந்து எனக்கு ஆசி வழங்குகிறார்கள்.
பாரத தேசம் 100 மடங்கு முன்னேறினால், அதற்கு இணையாக தமிழ்நாடும் 100 மடங்கு முன்னேறவேண்டும். அவ்வாறு முன்னேற்றுவது மோடியின் உறுதிமொழி.
தமிழக நலனுக்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத அரசாங்கம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு என்ன செய்தாலும், குறை சொல்கிறார்கள். அதை மீறி மக்களுக்கு நாங்கள் நன்மை செய்து கொண்டிருக்கிறோம். இவர்கள் ஏன் நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறார்கள்? திட்டங்களை ஏன் தடுக்கிறார்கள்?
மக்களின் நலனைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் மாநில அரசுக்கு இருக்கிறது? இவர்கள் நாட்டைக் கொள்ளை அடிப்பதற்காகவே வளர்ச்சியை தடுக்கின்றனர். அதையெல்லாம் மீறி மக்களுக்கு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம்.
ராமரும், தமிழ்நாடும்… தமிழகத்துக்கும், ராமருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள். ராமேசுவரம், தனுஷ்கோடி கோயில்களுக்குச் சென்று ஆசீர்வாதம் பெற்ற பினனர்தான், அயோத்தி ராமர் கோயிலைத் திறந்துவைத்தேன். ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சி அடைந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் திமுகவெளிநடப்பு செய்தது. அதை அவர்களால் ஏற்க முடியவில்லை. இதன்மூலம் உங்கள் நம்பிக்கையை அவர்கள் எதிர்க்கிறார்கள். தனது குடும்பவளர்ச்சியைத் தவிர, மாநிலத்தின் வளர்ச்சியை அவர்கள் விரும்பவில்லை.
ஆனால், பாஜக அப்படியில்லை. உங்களை நேசிக்கிறோம். உங்கள்குடும்பத்தில் இருந்து ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கி இருக்கிறோம். இந்தி பேசும் மாநிலத்திலிருந்து அவருக்கு எம்.பி. பதவியை மறுபடியும் கொடுத்துள்ளோம். எங்களுக்கு நாடும், மக்களும்தான் முக்கியம்.
அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விமானத்தில் இருந்து விழுந்தபோது, ஒரு கீறல்கூட இல்லாமல் அழைத்து வந்தோம். இலங்கையில் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது, அதைதடுத்து நிறுத்தினோம். இந்தியர்கள் மீது எவரும் கை வைக்க முடியாது.
அரசியலை திருத்த வேண்டிய காலம் வந்துள்ளது. திமுக பொய்வேஷம் போடுகிறது. பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது. ஆனால், இனி திமுகவைப் பார்க்க முடியாது. தமிழகத்தில் இனியும் திமுக இருக்க முடியாது. ஏனெனில், இங்கு அண்ணாமலை வந்துவிட்டார். இனி நீங்கள் எங்கு தேடினாலும் திமுக இருக்காது. தாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, உங்கள் நம்பிக்கையை, உங்கள் மொழியை, உங்கள் இனத்தை சிறுமைப்படுத்தி, கேவலப்படுத்தும் திமுக, மக்களவைத் தேர்தலுக்குப்பின் முற்றிலுமாக இங்கிருந்து அகற்றப்படும்.
நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் வந்த பிறகுதான், இப்பகுதியில் தொழில் வளத்திலும், போக்குவரத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகரில் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
எனக்கு 10 ஆண்டுகால ஆட்சி அனுபவம் இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் என்ன செய்யப் போகிறோம் என்ற திட்டமும் இருக்கிறது. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்போது, உலகின் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளில் 5-வது இடத்திலிருந்து,3-வது இடத்துக்கு இந்தியா முன்னேறும். தமிழக இளைஞர்கள், பொறியியல் வல்லுநர்கள் தங்கள் பாடங்களை தமிழ் மொழியில் படிப்பதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழக இளைஞர்கள் இருக்கும் இடத்திலிருந்தே, செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் மூலம் பயனடைவர்.
வளர்ச்சியையும், தொலைநோக்குப் பார்வையையும் முன்னிறுத்தி 2024 தேர்தலை பாஜக சந்திக்கிறது. மறுபுறம், திமுக, காங்கிரஸார் ஆட்சி அதிகாரத்தால் தாங்கள் சம்பாதிக்க வேண்டும், தங்களது குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள் என்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். பதில் இருக்காது. ஆனால், அடுத்து யார் முதல்வராகப் போகிறார்கள், யார் எம்.பி.மற்றும் எம்எல்ஏவாகப் போகிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள். உடனே பதில் கிடைக்கும். அப்பாவுக்கு அப்புறம் பிள்ளை, அப்புறம் அவர் பிள்ளை என வாரிசு அரசியலை முன்னிறுத்துகிறார்கள்.
நாட்டை விட குடும்பம்தான் முக்கியம் என்று திமுக கருதுகிறது. ஒவ்வொரு நாளும் மக்களைப் பிரித்தாள வேண்டும். ஏதாவது பிரச்சினையை கிளப்ப வேண்டும். மொழி, சாதியை வைத்துசண்டையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். ஆனால் அந்த எண்ணம் நிறைவேறப் போவதில்லை. திமுகவினரின் சுயநலத்தை அடக்கி, பொதுநலத்தை முன்னிறுத்தும் நாள் வெகுதூரத்தில் இல்லை. சுயநலத்துடன் வருவோரை தமிழகம் நிராகரிக்கும்.உங்கள் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்பட நான் இருக்கிறேன்.
உங்கள் முன் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகமாக இருக்கிறது. எனது ஒவ்வொரு சொல்லும் புரியாவிட்டாலும், எனது மனதைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
தூத்துக்குடி, நெல்லை விழா துளிகள்:
* தூத்துக்குடி அரசு விழாவில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய, பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தண்ணீர் பாட்டில் உட்பட எதுவும் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை. இதனால், ஆங்காங்கே தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டிருந்தன.
* பிரதமர் மோடி பேசும்போது இடையிடையே பாஜகவினர் எழுந்து நின்று கோஷமெழுப்பினர். இதனால் உற்சாகமடைந்த பிரதமர், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை அவ்வப்போது பேசினார்.
* விழாவில் பேசிய பிரதமர், மேடையில் அமர்ந்திருந்த கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் எ.வ.வேலுவின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை. விழாவில் பிரதமருக்கு மத்திய அமைச்சர் சதானந்த சோனோவால், வெள்ளி செங்கோலைப் பரிசளித்தார்.
* நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடு தளத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் காரில் வந்தபோது, சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்ற பொதுமக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியின் பல்வேறு தோற்றங்களை வரைந்து, அந்த ஓவியங்களுடன் தனியார் ஓவியப் பயிற்சிக்கூட மாணவ, மாணவியர் அணிவகுத்து நின்றிருந்தனர்.
* மேடையில் இருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி வந்த பிரதமர், நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தியை மட்டும் அணைத்துக் கொண்டார். ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று தமிழில் பேச்சைத் தொடங்கிய பிரதமர், தொடர்ந்து இந்தியில் பேசினார்.
* பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்பட்டிருந்த பதாகையில் 2024 என்ற எண்ணிலிருந்து அம்புகுறியிட்டு, 400 பிளஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்களான அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி. திருமாறன் பேசினர்.
* பிரதமர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். மதியம் 1.10 மணி வரை பிரதமர் பேசினார். குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தாலும், மதிய உணவு வழங்கப்படவில்லை. பந்தலுக்குள் காலையிலேயே வந்துவிட்ட பொதுமக்களும், தொண்டர்களும் பசியால் தவித்தனர்.