வெனிசூலா நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இது தொடர்பான வழக்கில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அரசியல் எதிரியாக கருதப்படுகிற எதிர்க்கட்சி தலைவர் லியோபோல்டோ லோபஸ் கைது செய்யப்பட்டார். கலகத்தை தூண்டியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த தண்டனையை எதிர்த்து அவர் மேல்-முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது அவர் தன்னை நிரபராதி என கூறினார்.“நான் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தினேன். அரசியல் சட்டத்தின்படிதான் செயல்பட்டேன். மற்ற வெனிசூலா மக்களுக்கு உள்ள உரிமையைத்தான் நானும் எனது உரிமையாக கருதி செயல்பட்டேன்” என கூறினார்.
அவரது ஆதரவாளர்கள் கோர்ட்டு வளாகத்தில் கூடி, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.இருப்பினும் அவரது மேல்-முறையீடு ஏற்கப்படுமா என்பது தெரிய 10 நாட்கள் ஆகும் என தகவல்கள் கூறுகின்றன.