சீன இறக்குமதிக்கு இந்தியா தடைவிதித்துள்ளதைப் போல அமெரிக்காவும் பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் இருவர் அதிபர் ஜோ பைடனிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஷரோட் பிரவுண் மற்றும் ரிக் ஸ்காட் ஆகிய இரண்டு எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: சீனாவிலிருந்து நாள்தோறும் வரி விலக்கு பிரிவில் ஏராளமான பொருட்கள் அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகின்றன. உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க சீன அரசு முக்கிய துறைகளுக்கு மானியங்களை வழங்கி வருவதுடன், தொழிலாளர்களுக்கான செலவினமும் அங்கு குறைவாக உள்ளது. இதனால், மலிவு விலையில் சீன பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இதனால், அவர்களுடன் போட்டியிட முடியாத சூழலில் அமெரிக்க உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
இதேபோன்ற நிலை 2019-ல் இந்தியாவிலும் காணப்பட்டது. அங்குள்ள உள்ளூர் சட்டப்படி ரூ.5,000 வரையிலான சீன பொருட்களுக்கு கிப்ட்ஸ் பிரிவில் வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதில் முறைகேடுகள் நடப்பது தெரியவந்ததையடுத்து, 2020 ஜூனில் இந்திய அரசு இதுபோன்ற இறக்குமதிக்கு தடைவிதித்ததுடன், 50-க்கும் மேற்பட்ட சீனாவின் ஆன்லைன் விற்பனை செயலிகளை முடக்கியது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எடுத்த இதே நடவடிக்கையை அமெரிக்காவும் தற்போது மேற்கொள்ள வேண்டும். ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 800 டாலர் வரை ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம் என்பதால் பெரும்பலான பொருட்கள் இதன் வழியே ஆர்டர் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், டெமு, ஷீன், அலிஎக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்கள் வரி விலக்கு மூலம் நியாயமற்ற வகையில் அதிக பலனடைகின்றன. இவற்றை தடை செய்ய வேண்டும்.
ஜோ பைடன் அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.