பொலிஸ்மா அதிபரின் நியமனம் சட்ட விரோதமானதல்ல

73 0

பொலிஸ்மா அதிபரின் நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது என்றால், பாராளுமன்றத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள சகல சட்டங்களும் செல்லுபடியற்றதாகும். அரசியலமைப்பு  பேரவையின் 9 உறுப்பினர்களில் ஐவர் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளதால் அதனைச் சட்ட விரோதமானதெனக் கூற முடியாது என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொலிஸ்மா அதிபரின் நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது என பலராலும் முன்வைக்கப்படும் வாதங்களை தற்போது ஏற்றுக் கொண்டால், இதுவரைக் காலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள எந்தவொரு சட்டமும் செல்லுபடியற்றதாகும். அதாவது பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் பெரும்பான்மை வாக்கு எண்ணிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றல்லவா இவர்கள் குறிப்பிடுகின்றனர்?

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டிலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை என்பவை சுயாதீனமாக செயற்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். அதற்கமையவே அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டது. அரசியலமைப்பு பேரவையிலுள்ள சகல உறுப்பினர்களதும் இணக்கப்பாட்டுடன் தீர்மானமொன்றை எடுப்பதற்கு அப்பேரவை முயற்சிக்க வேண்டும் என்று யாப்பிலேயே கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு இணங்க முடியாத சந்தர்ப்பத்திலேயே பெரும்பான்மை வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் இறுதி தீர்மானத்தை எட்டுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த நியமனத்தில் 9 உறுப்பினர்களில் ஐவர் ஆதரவாக வாக்களித்துள்ளதால் அதுவே இறுதி தீர்மானமாகும். சில சட்ட மூலங்கள் ஒரு வாக்கு வித்தியாசயத்தில் கூட நிறைவேற்றப்படுகின்றன. அவ்வாறெனில் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூற முடியாதல்லவா? எனவே பொலிஸ்மா அதிபர் நியமனத்தை சட்ட விரோதமானது எனக் கூற முடியாது என்றார்.