திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வியாபார நிலையங்கள் குறித்து நகரசபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்கரையை அண்டி சவுக்கு மரங்கள் நடப்பட்டுள்ள காணிப்பகுதியில் பூஜாபூமி எனும் அடிப்படையிலாக விகாரைக்கென காணிப்பகுதி ஒன்று அரச உறுதிப்பத்திரம் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதியானது விகாரைக்காக வழங்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு அப்பகுதியில் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
குறித்த விகாரைக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் தனிப்பட்ட இடம் என கருதப்படும் வகையில் சிற்றுண்டிகள் மற்றும் மென்பானங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றினை தனி நபர் ஒருவர் அமைத்த நிலையில் அதனை அவதானித்த சமூக அமைப்புக்கள் திருகோணமலை நகர சபை செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட திருகோணமலை மக்கள் எழுச்சி ஒன்றியத்தின் தலைவர் ரொஷான் அக்மீமன, விகாரைக்கு உரித்தான காணிக்குள் எந்தவொரு அனுமதியும் இன்றி தனியார் ஒருவரால் முன்னெடுக்கப்படவிருந்த சட்ட விரோத வியாபாரஸ்தலம் குறித்து நகரசபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், உள்ளூர் அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னராக குறித்த நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் விகாரைக்கு உரித்தான நடவடிக்கைகள் தவிர்ந்த எந்தவொரு நிர்மாணப்பணிகளையும் முன்னெடுப்பதற்கு அதற்காக வழங்கப்பட்டுள்ள உறுதிப்பத்திரத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது என அதில் குறிப்பிட்டுள்ள நிலையில் முறைகேடான வகையில் அக்கட்டுமானமானது எவ்வாறு முன்னெடுக்கப்பட முடியுமென இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த கட்டுமானத்தை மேற்கொண்டிருந்த நபருக்கு எதிராக கடந்த வருடம் முதல் நகராட்சி மன்றத்தினால் கட்டுமானத்திற்கான அனுமதி தொடர்பில் கோரப்பட்டு வந்ததாகவும் தெரிய வருகின்றது.