‘ஆர்டர்’ செய்யப்படும் பீட்சாக்கள் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் விரைவாக டெலிவரி செய்யப்படுகிறது.அதுபோன்று அமெரிக்காவில் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் காபி, கேக், சிக்கன் சாண்ட்விச் போன்ற உணவு பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டது.
விமான அதிகாரிகளின் ஒப்புதலின் பேரில் திவேடாவில் உள்ள ரெனோ என்ற இடத்தில் முதன் முறையாக இச்சம்பவம் நடந்தது. 7-இலவன் என்ற ஒரு சில்லரை விற்பனை தனியார் நிறுவனம் இதற்கு ஏற்பாடு செய்தது.
ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் சிக்கன் சாண்ட்விச், சூடான காபி மற்றும் ‘டோனட்ஸ்’ எனப்படும் ‘கேக்‘ போன்ற உணவு பொருட்களை பார்சல் பெட்டியில் வைத்து ஆளில்லா விமானத்தில் கட்டி ரெனோ நகரில் வாழும் ஒரு வாடிக்கையாளரின் வீட்டுக்கு அனுப்பப்பட்டது.
அந்த பார்சலை சுமந்தபடி பறந்து சென்ற ‘டிரோன்’ (ஆளில்லா விமானம்) அதை உரிய வீட்டின் விலாசத்தில் கொண்டுபோய் பத்திரமாக சேர்த்தது. உணவு பொருட்களை பெற்றுக்கொண்ட நபர்கள் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.
அமெரிக்காவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. ஆனால் உணவு பொருட்களை வீட்டில் கொண்டுபோய் டெலிவரி செய்தது இதுவே முதல் முறையாகும்.
தற்போது இச்சேவை வெற்றி பெற்றதன் மூலம் பேரிடர் காலங்களில் ஆளில்லா விமானம் மூலம் விரைவில் மனிதாபிமான உதவிப் பொருட்கள் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ‘பினார்டி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தனது நிறுவனத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களையும் ஆளில்லா விமானம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்க திட்ட மிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.