அறநிலையத் துறை கோயிலில் பணம் வசூல்: அரவக்குறிச்சி டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

63 0

கரூர் கோயிலில் தனி உண்டியல் வைத்து கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக அரவக்குறிச்சி டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கரூர் வரதராஜ பெருமாள் கோயில், புஷ்பநாத சுவாமி கோயில், கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோயில், மகாபல்லேஸ்வரர் கோயில், வழங்கியம்மன் வாஞ்சி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில்களுக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.

இந்தக் கோயில்களின் சொத்துக்கள் தொடர்பாக 2018-ல் வருவாய்த்துறை உதவியுடன் அறநிலையத் துறை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் கோயில் சொத்துகள் தனியார் பெயருக்கு பத்திரப் பதிவு செய்ததும், பட்டா வழங்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்த ஆய்வின் அடிப்படையில் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட கோயில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை ஆணையர் சம்பந்தப்பட்ட கோயில்களின் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி கோயில் நிலங்களை மீட்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தனியாருக்கு கொடுக்கப்பட்ட கோயில் சொத்துக்களின் மதிப்பு பல கோடி ரூபாய் அதிகமாகும்.

பல கோயில்களில் கோயில் பராமரிப்புக்கு போதுமான நிதியில்லை எனக் கூறி கோயில் உள்ள தனியாக உண்டியல் வைத்தும், ஜிபே வழியாகவும் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. எனவே கரூர் மாவட்ட கோயில்களுக்கு சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மீட்டு பராமரிக்கவும், கோயில்களில் உண்டியல் வைத்து வசூல் செய்யும் வெளி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. கோயில் செயல் அலுவலர் சரவணன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், மகாபல்லேஸ்வரர் கோயிலில் தனி உண்டியல், ஜிபே மூலம் பணம் வசூலித்தது தொடர்பாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல்கபூர் நேரில் ஆஜராகி, விசாரணைக்கு போதுமான கால அவகாசம் வேண்டும் என்றார். மனுதாரர் வாதிடுகையில், “இந்த ஒரு கோயிலில் மட்டுமல்லாமல், கரூரில் பல கோயில்களில் குபேர உண்டியல், தாய் சமர்ப்பணம் என்ற பெயரில் கோயிலுக்கு சம்பந்தம் இல்லாத நபர்களை கொண்டு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது” என்றார்.

இதையடுத்து நீதிபதி, கோயிலில் தனிநபர் உண்டியல் வைத்து வசூல் செய்வதை ஏற்க முடியாது. இது குறித்து கோயில் செயல் அலுவலர் போலீஸில் புகார் அளித்தாரா? அந்தப் புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்தார்களா? முறைகேட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளை (பிப்.27) ஒத்திவைத்தார்.