அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் திறப்பு: தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்பு

63 0

சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதியின் நினைவிடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தார். அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து முதல்வர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், திமுக தலைவர்கள், கூட்டணிக் கட்சியினர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன், அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் மொத்தம் 8.57 ஏக்கரில் அமைந்துள்ளன. இதன் நுழைவுவாயிலை கடந்து சென்றதும், அண்ணா, இளங்கோவடிகள், கம்பர் சிலைகளும், அண்ணா அருங்காட்சியகமும் உள்ளது. அண்ணா சதுக்கத்தை கடந்ததும், அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் வகையில் கருணாநிதி சிலை அமைந்துள்ளது. ‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்ற வாசகத்துடன் கருணாநிதி சதுக்கம் அமைந்துள்ளது.

தமிழை செம்மொழி என மத்திய அரசு ஏற்றதை பாராட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா எழுதிய கடிதம் தமிழ், ஆங்கிலத்தில் புத்தக வடிவில் வைக்கப்பட்டுள்ளது. சதுக்கத்தின் பின்புறம், வியட்நாம் மார்பிள் சுவரில் வண்ண கற்களால் கருணாநிதி முகம் பொறிக்கப்பட்டுள்ளது. இரவில் இந்த சுவரின் பின்னால் ஒளிரும் விளக்கு மூலம், கருணாநிதி உருவம் முழுமையாக ஒளி வெள்ளத்தில் தெரியும் வகையிலும், சுற்றிலும் பொன்னிறத்தில் நட்சத்திரங்கள் தெரியும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சதுக்கத்தின் கீழே நிலவறை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் சாதனை திட்டங்கள், முக்கிய நிகழ்வுகள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் அருங்காட்சியகத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களான வைகோ, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.