மின்கட்டண திருத்த யோசனை இன்று அல்லது நாளை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும்.சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் மின்கட்டணம் குறைக்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியாவது,பொது மின்சார சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் 2024.01.22 ஆம் திகதி ஊடக சந்திப்பை நடத்தி ‘ பாராளுமன்றம் 7 கோடி ரூபா மின்கட்டணத்தை செலுத்தவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நான் ஆராய்ந்து பார்த்தேன். அரச நிறுவனங்களில் பாராளுமன்றம் தான் காலதாமதமில்லாமல் மின்கட்டணம் செலுத்துவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
பாராளுமன்றம் மீதான மக்களின் கௌரத்தை சீர்குலைக்கும் வகையில் பொய்யான கருத்தை ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இவரை பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.