ஆப்கானிஸ்தானில் கனமழை: மண்ணில் புதைந்த வீடுகள்; 5 பேர் பரிதாபமாக பலி!

81 0

ஆப்கானிஸ்தானின் கிழக்கில் உள்ள பகுதியொன்றில் பெய்த கனமழையால் நிலசரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்ததில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், கட்டிட இடிபாடுகளில் சுமார் 25 பேர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் மாகாணத்தில் உள்ள நூர்கிராம் மாவட்ட மலைப்பகுதியில் ஒரு கிராமத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.  இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று மதிய நிலவரப்படி 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 25 பேரைக் காணவில்லை என்றும் மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணம், பெரும்பாலும் மலை மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.