கிராமங்களில் அபிவிருத்தி முன்மொழிவுகளை தயாரிப்பதில் கிராமத்தின் பரந்த பிரதிநிதித்துவத்துடன் கிராமக் குழுக்களினால் உரிய முன்மொழிவுகள் தயாரிக்கப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மலைப் பத்தாண்டு மற்றும் மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களின் பங்களிப்பு கட்டாயம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மலைப் பத்தாண்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வது இம்மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடையும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (16) மலைப் பத்தாண்டு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார். இது பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதன் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன் தெனிபிட்டிய மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய அமைச்சர், பதுளை மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், 567 கிராம சேவகர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார். பதுளை, பண்டாரவளை, எல்ல, ஹாலியெல, ஹப்புத்தளை, ஹல்தும்முல்ல, கந்தகெட்டிய, லுனுகல, மஹியங்கனை, மீகஹகிவுல, பசறை, ரிதிமாலியத்த, சொரணாதொட்டை, ஊவா பரணகம மற்றும் வெலிமட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளாகும்.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தொழிநுட்ப பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்க்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கிராமிய குழுக்களின் மூலம் அடையாளம் காணப்படாத திட்ட முன்மொழிவுகளை அங்கீகரிக்க வேண்டாம் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
அபிவிருத்தி முன்மொழிவுகளின் சேகரிப்பு இம்மாதம் நிறைவடைந்தாலும், முன்மொழிவுகளை மீண்டும் பரிசீலிக்க மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
கிராமத்திற்கு ஏற்ற அபிவிருத்தி முன்மொழிவுகளை மக்களிடமே பெற்று அவற்றை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலைப் பத்தாண்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றார். இந்த வேலைத்திட்டம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 31 ஆம் திகதி முடிவடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது:
“இது ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டமாகும். அவரது மேற்பார்வையின் கீழ், இந்த திட்டம் ஒரு குழு மூலம் செயல்படுத்தப்படுகிறது. அபிவிருத்தித் திட்டங்களைக் கண்டறியும் போது அதிக எண்ணிக்கையிலான திட்டங்களைக் காண முடியும். முன்னுரிமைகளின் அடிப்படையில் பட்டியலை உருவாக்கி அதன்படி செயல்படுங்கள். ஏனென்றால் எங்களிடம் பணம் குறைவாக உள்ளது. முன்னுரிமை ஆவணத்தை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகு செயல்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில், ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களை அழைத்து இந்த வேலைத்திட்டம் குறித்து தெரிவித்தோம். இதன் பயன்களை கிராம மக்களுக்கு நேரடியாகப் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படாததால், இத்திட்டத்தின் அதிகபட்ச பயன்களை மக்கள் பெற வேண்டும். இதன் மூலம் ஒரு பிரதேச செயலகத்திற்கு 1,000 இலட்சம் ரூபா கிடைக்கும்.
இந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், 10 முக்கிய அபிவிருத்திப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதாவது வாழ்வாதாரம், சந்தை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு, கல்வி, குடிநீர் வசதி, விவசாயம் மற்றும் சிறு நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்கவை, தொலைபேசி மற்றும் இணையம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் வீட்டு வசதிகளை மேம்படுத்துதல். மலையக பிரதேசங்களில் வாழும் பெருந்தோட்ட சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு விரைவான மற்றும் திட்டமிடப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்”.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ. குட்டியாராச்சி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்தியானந்த, பதுளை மாவட்ட செயலாளர் பி.எஸ்.பி. அபேவர்தன மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.