ஒட்டகம் கூடாரத்துள் நுழைந்தபோதே தமிழரசின் வீட்டை சூது கவ்வியது!

181 0

ஒட்டகம் முதலில் தனது தலையைத்தான் கூடாரத்துள் புகுத்தும். பின்னர் படிப்படியாக முழு உடம்பையும் உள்ளே தள்ளும். இதனால் ஏற்கனவே கூடாரத்துள் இருந்தவர்கள் வெளியேறுவர் அல்லது வெளியேற்றப்படுவர். இது நடைபெறவில்லையென்றால் ஒட்டகம் கூடாரத்தை நிர்மூலமாக்கி தனது முன்னைய இடத்துக்கு திரும்பிவிடும் என்று எப்போதோ படித்தது ஏன்தான் இப்போது நினைவுக்கு வருகிறதோ தெரியவில்லை. 

சாண் ஏற முழம் சறுக்குது என்றொரு முதுமொழியுண்டு. அகில இலங்கை தமிழரசுக் கட்சிக்கு இப்போது இது பொருத்தமாகத் தெரிகிறது.

சுமார் பத்து ஆண்டுகளாக புதிய நிர்வாகிகள் தெரிவின்றி ஒரே தலைமையில் இயங்கிய தமிழரசுக் கட்சிக்கு புதுவாழ்வு கொடுக்க வேண்டுமென்ற சிரத்தையால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி கட்டெறும்பாகி நிற்கிறது.

மாவை சேனாதிராஜாவின் பதவி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று புறப்பட்டவர்கள் இன்று பதவி மோகத்தால் சூழ்ச்சி வலைகளைப் பின்னி கட்சியை நீதிமன்றத்துள் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர்.

தென்னிலங்கையிலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் 1970களில் டட்லி சேனநாயக்கவுக்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையில் உருவான பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. சிறீலங்கா சுதந்திர கட்சிக்கு உரிமை கோரி அநுர பண்டாரநாயக்க தமது தாயார் சிறீமாவோவுக்கும் சகோதரி சந்திரிகாவுக்கும் எதிராக நீதிமன்றத்தை நாடினார். இவர்களின் பிரச்சனை ஆட்சியைக் கைப்பற்றி அரியாசனம் ஏறுவதால் உருவானது.

ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை கட்சியை வளர்ப்பது என்பதைவிட அதனை உடைத்து நிர்மூலமாக்குவதையே இலக்காக்கியுள்ளது. இதன் ஆரம்பம் 2020ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போதே ஆரம்பமானது. இரண்டு பிரமுகர்கள் தங்களுக்குள் செய்துகொண்ட ‘கனவான்கள் ஒப்பந்தம்’ சில வாக்குறுதிகளை மையமாகக் கொண்டது. எவ்வகையிலாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஏற்பட்ட இந்த இணக்கம், அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைவர் தெரிவின்போது மீறப்பட்டது.

கடந்த தேர்தலின்போது தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் சிவஞானம் சிறீதரனின் ஆதரவை சுமந்திரன் நாடினார். இதன் அடிப்படையில் எழுதாத இந்த ஒப்பந்தம் சிறீதரனின் வாக்குப்பலத்தை சுமந்திரனுக்குப் பகிர்ந்தது. சிறீதரனுக்கு முதலாம் வாக்களிப்பவர்கள் இரண்டாவது வாக்கை சுமந்திரனுக்கும், சுமந்திரனுக்கு முதலாம் வாக்களிப்பவர்கள் இரண்டாம் வாக்கை சிறீதரனுக்கும் அளிப்பதற்கு ஏற்பாடானது.

2015 தேர்தலில் 72,058 வாக்குகள் பெற்ற சிறீதரன் 2020 தேர்தலில் 35,887 வாக்குகளைப் பெற்றார். 2015 தேர்தலில் 58,043 வாக்குகளைப் பெற்ற சுமந்திரன் 2020ல் 27,834 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

சுமந்திரனும் சிறீதரனும் கூட்டுச் சேர்ந்ததை விரும்பாத தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டியதால் 2015ல் இருவரும் பெற்ற வாக்குகளைவிட சுமார் ஐம்பது வீதம் குறைவான வாக்குகளையே 2020 தேர்தலில் பெற முடிந்தது. கட்சித் தலைமை தேர்தலின்போது சிறீதரனுக்கு ஆதரவளிப்பதாக சுமந்திரன் அளித்த வாக்குறுதியை நம்பியே, சிறீதரன் தமது ஆதரவு வாக்குகளை சுமந்திரனுக்கு வழங்கி அவரை வெற்றிபெறச் செய்தாரென்பது அப்போதே வெளிவந்த தகவல்.

ஆனால், கடந்த மாதம் தலைவர் தெரிவு அறிவிக்கப்பட்டபோது சிறீதரனை எதிர்த்து சுமந்திரன் போட்டியிட களமிறங்கினார். தமிழரசுக் கட்சிக்குள் ஜனநாயகம் இருக்கிறது என்பதை வெளிக்காட்டவே தாம் போட்டியிடுவதாக அவர் இதனை நியாயப்படுத்தவும் முனைந்தார். ஆக ஜனநாயகம் என்ற பெயரிலேயே தாம் போட்டியிடுவதாக அறிவித்து சிறீதரனின் நெற்றியில் நாமம் போட்டார்.

தலைவர் தெரிவு முடிவு சுமந்திரன் சற்றும் எதிர்பாராதது. தமக்கு 200 வரையானவர்களின் ஆதரவு இருப்பதால் சிறீதரன் தோற்கடிக்கப்படுவாரென்று இவர் முழுமையாக நம்பியிருந்தார். இதன் அடிப்படையிலேயே, சிறீதரன் வெற்றி பெற்றால் ஒரு வாரம்கூட அவரது தலைமையின் கீழ் தாம் இருக்கப் போவதில்லையென்று தமக்கு நெருக்கமானவர்களிடம் அவர் தெரிவித்திருந்ததை சில உள்நாட்டு ஊடகவியலாளர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

இதனால், தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் தம்மை ஒரு ஜனநாயகவாதியாக வெளிக்காட்டுவதற்காக புதிய தலைவருடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாரென அறிவித்த சுமந்திரன் அடுத்த கணமே மறைமுகமாக தமது வித்தையைக் காட்டும் நடவடிக்கைகளை கனகச்சிதமாக ஆரம்பித்தார்.

நிர்வாகிகள் தெரிவு ஆரம்பமான கூட்டத்துக்கு முன்னர் புதிதாக தெரிவான தலைவர் சிறீதரனுடன் கலந்துரையாடும்போது, தலைவர் தெரிவின்போது பிரிந்திருந்ததாக காணப்படும் இரண்டு அணிகளும் ஒன்று சேர வேண்டுமானால் கட்சியின் செயலாளர் பதவி தமக்கு தரவேண்டுமென சுமந்திரன் நேரடியாக வேண்டினார்.

கட்சியின் மரபுப்படி செயலாளர் பதவி கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட வேண்டுமென சிறீதரன் பவ்வியமாக எடுத்துக் கூறினார். இதனை நன்கு தெரிந்து கொண்டே அப்பதவியைக் கேட்டது இவரது ‘ஏ’ பிளான். அடுத்து தமது ‘பி’ பிளானை நாசூக்காக முன்வைத்தார். அதாவது, செயலாளர் பதவிக்கு மூவரின் பெயர்களை சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை குகதாசன், மட்டக்களப்பு சாணக்கியன், அம்பாறை கலையரசன் ஆகியோரின் பெயர்களே சுமந்திரனால் தெரிவிக்கப்பட்டவை. இவரது நெளிவுசுளிவுகளை நன்கு அறிந்திராத சிறீதரன் அதற்குள் அகப்பட்டார்.

மட்டக்களப்பில் கடந்த தேர்தலின்போது தமிழரசுக் கட்சியில் இணைந்த சாணக்கியனுக்கு மூத்தவர்களான சிறீநேசன், அரியநேந்திரன், யோகேஸ்வரன் போன்றொரும், அம்பாறையில் கோடீஸ்வரன் போன்றோரும் திருமலையில் நவம் போன்றோரும் இருக்க எதற்காக குறிப்பிட்ட மூவரின் பெயர்களை மட்டும் சுமந்திரன் சிபாரிசு செய்கிறார் என்பதை அப்போது சிறீதரன் ஏனோ சிந்திக்கத் தவறி விட்டார்.

இவ்விடயங்கள் தொடர்பாக தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சுமந்திரன் வழங்கிய நேர்காணலை கூர்ந்து அவதானித்தால் இவ்விடயத்தில் அவர் போட்ட வேடத்தை அப்பட்டமாக தெரிந்து கொள்ள முடியும். செயலாளர் பதவியை தமக்கு தருமாறு கேட்டதாக முதலில் தெரிவித்த சுமந்திரன் பின்னர் அப்பதவியை தாம் கேட்கவில்லையென்றும் தமது கருத்தை மட்டுமே சிறீதரனிடம் தெரிவித்ததாகவும் கூறி அதனை மழுப்புவதற்கு பெரும் பிரயத்தனம் மேற்கொண்டார்.

குகதாசன், சாணக்கியன், கலையரசன் ஆகியோர் சுமந்திரன் அணியினர் என்பது அனைவரும் அறிந்த சமாச்சாரம். இவர்களில் ஒருவருக்கு செயலாளர் பதவி வழங்கினால் மட்டுமே, தலைவர் தெரிவில் பிரிந்திருப்பதாகக் காணப்படும் இரண்டு அணிகளும் ஒன்றுசேர முடியுமென்று சுமந்திரன் இங்கு கூறியது அவரது ரகசிய திட்டம் என்ன என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

கனடாவில் வாழ்ந்து வந்த குகதாசன் திருகோணமலைக்குச் செல்ல புறப்பட்டபோது தமக்கு எம்.பி. பதவி நிச்சயம் என்றும், தேர்தலில் தோல்வியடைந்தால் தேசிய பட்டியல் எம்.பி. பதவி தமக்கே என்றும் பலரிடம் கூறியுள்ளார். அவரின் எம்.பி. கனவை கானல் நீராக்கி நியமன எம்.பி. பதவியை கலையரசனுக்குப் பெற்றுக் கொடுத்தவர் சுமந்திரனே.

திருமலை எம்.பி. பதவி கிடைக்காததில் ஏமாற்றம் கண்ட குகதாசன் தமது ஆதரவாளர்கள் சிலரை தமிழரசு கூட்டத்துக்குக் கூட்டிச் சென்று மூத்த தலைவர் சம்பந்தனை அப்புறப்படுத்தும் செயல்களுக்கு பிள்ளையார் சுழி போட்டார். சம்பந்தன் முதுமை காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளுக்குச் செல்லாதபடியால் அப்பதவியை இன்னொருவருக்கு வழங்க வேண்டுமென்ற பாணியில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுமந்திரன் சுட்டியிருந்தார்.

இதனை வழிமொழியும் பாதையில் இன்னொரு தொலைக்காட்சியில் குகதாசன் வழங்கிய செவ்வியில், ஐயாவுக்கு (சம்பந்தன்) காது கேட்பது குறைவு, அவர் பேசுவதையும் புரிய முடியவில்லை என்று கூறி சம்பந்தனுக்கு எதிராக ஓர் அலையை உருவாக்க எத்தனித்தார். இந்தப் பின்னணிகளில் சுமந்திரன் – குகதாசன் கூட்டு சம்பந்தரை அவமானப்படுத்தி அகற்ற எடுத்த முயற்சி. இது கைகூடாத நிலையில் குகதாசனை முதன்மைப்படுத்தி கட்சியின் செயலாளராக்கி, தமது விருப்பங்களை அவர் மூலம் செயற்படுத்தி கட்சியை தம்வசப்படுத்தவே சுமந்திரன் முயற்சிகளை மேற்கொண்டார்.

இப்போது கட்சித் தலைவர் தெரிவு, செயலாளர் தெரிவு உட்பட எல்லாமே நீதிமன்றம் முன்னால் சென்றுள்ளன. இந்த மாதம் 19ம் திகதிய கூட்டத்துக்கு இரண்டு நீதிமன்றங்கள் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளன. கடந்த வார பத்தியில் இவ்விடயங்களின் முக்கியத்துவம் கருதி எழுதப்பட்ட பின்வரும் பந்தியை இங்கு மீள்பதிவு செய்ய வேண்டியுள்ளது.

‘முதற்கோணல் முற்றுங்கோணல்’ என்ற முதுமொழியை நிரூபிப்பதுபோல அடுத்த கட்ட நடவடிக்கைகளும் செயலாளர் தெரிவும் கோணலாகிப் போயுள்ளது. கட்சியின் புதிய தலைவராக இன்னமும் பதவி ஏற்காத சிறீதரனுக்கு சுமந்திரன் எழுதிய கடிதம் முக்கியமானது. தலைவர் தெரிவின்போது யாப்புக்கு முரணான பல இடம்பெற்றன என்பது தெரிந்தும், போட்டி முடிவை (தமது தோல்வியை) தாம் ஏற்றுக்கொண்டதாக சுமந்திரன் தெரிவித்திருப்பதை இங்கு முக்கியமாகப் பார்க்க வேண்டும். இந்த வாதத்தையே சிறீதரனுக்கு எதிரான ஓர் ஆயுதமாக சுமந்திரன் பின்னொரு வேளையில் பாவிக்க மாட்டார் என்று கூற முடியாது.

அச்சொட்டாக அதுவேதான் இன்று நடைபெறுகிறது. தலைவர் தெரிவை மட்டுமன்றி செயலாளர் தெரிவையும் நடைபெற்ற கூட்டங்களையும், நடக்கவிருந்த கூட்டத்தையும் கேள்விக்குட்படுத்தி சட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனது எழுபத்தைந்தாவது அகவையில் தமிழரசுக் கட்சி சத்தியசோதனைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் இடம்பெறும் சூழ்ச்சிகளை முறியடித்து உடனடியாக கட்சியின் மகாநாட்டை நடத்துமாறு புதிய தலைவராகத் தெரிவான சிறீதரனுக்கு மூத்த தலைவர் சம்பந்தன் அறிவுறுத்தியுள்ளார்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்று புதிய தலைவர் சிறீதரன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்காக நீதிமன்றத்தில் வாதாட கட்சி கேட்டால் தாம் தயார் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். ”வாதியும் நானே, எதிரியும் நானே, எதிரிக்காக வாதிடப் போவதும் நானே என்ற மாதிரி அர்த்தநாரீஸ்வரர் ஆகலாம் எண்டுறியளோ தம்பி” என்று ஈழநாடுவின் அப்புக்குட்டி அண்ணை கேட்டுள்ளார்.

ஒட்டகம் முதலில் தனது தலையைத்தான் கூடாரத்துள் புகுத்தும். பின்னர் படிப்படியாக முழு உடம்பையும் உள்ளே தள்ளும். இதனால் ஏற்கனவே கூடாரத்துள் இருந்தவர்கள் வெளியேறுவர் அல்லது வெளியேற்றப்படுவர். இது நடைபெறவில்லையென்றால் ஒட்டகம் கூடாரத்தை நிர்மூலமாக்கி தனது முன்னைய இடத்துக்கு திரும்பிவிடும் என்று எப்போதோ படித்தது ஏன்தான் இப்போது நினைவுக்கு வருகிறதோ தெரியவில்லை.

பனங்காட்டான்