மக்கள் தொகை தொடர்பிலும் புள்ளி விபரங்களை அறிந்து கொள்ள வடக்கிற்கு விசேட பிரதிநிதி

383 0

வடக்கில் பெரும்பாலான காணிகள், வன ஜீவராசிகள் அமைப்பின் கீழும் இன்னும் சில பகுதிகள் தனியார் அமைப்புக்களின் கீழும் இருப்பதன் காரணமாகவே அவற்றை விடுவித்து மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (5) இடம்பெற்ற அமர்வில் வடமாகாண மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி மீட்பு போராட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே பிரதமர் ரணில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் காணி விடுவிப்பு தொடர்பான மக்களின் போராட்டம் நியாயமானது. ஆனால் அப்பகுதிகளில் காணப்படும் காணிகளில் பெரும்பாலானவை, தனியார் நிறுவனங்களுக்கு உரித்துடையவை, மேலும் அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு வன ஜீவராசிகள் அமைப்பை சார்ந்தது.

இந்த விடயத்தில் அவர்களுடன் அரசு நேரடி தலையீடு செய்ய முடியாது, அவ்வாறு தலையிடுவதற்கான அதிகாரமும் இல்லை. ஆகவே அதற்கான மாற்று வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக 1800 குடும்பங்களுக்கும் அதிகமாக நாம் காணியை பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்துவது இலகுவில் சாத்தியமானது அல்ல.

விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பிலும், மக்கள் தொகை தொடர்பிலும் புள்ளி விபரங்களை அறிந்து கொள்ள வடக்கிற்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க எதிர் பார்த்திருக்கின்றோம். அவர் மூலம் சிறந்த தீர்வினை பெற்றுத்தருவோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.