ஒப்புகைச் சீட்டை எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்: பிப்.23-ல் விசிக ஆர்ப்பாட்டம்

96 0

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டையும் எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிப்.23-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான், இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும். ஆளும் கட்சிதான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் நிரூபித்துள்ளனர்.

குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘பெல் நிறுவனத்தின்’ இயக்குநர்களாக பாஜகவினரே நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜக அரசும் செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேர்தல் ஆணையமும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ள தேர்தல் முறையைச் சிதைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக்கூடாது. மாறாக, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களோடும் ஒப்புகைச் சீட்டைப் பெறும் இயந்திரமும் இணைக்கப்பட வேண்டும்.

அப்போதுதான், வாக்காளர் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்த பின்னர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். அந்த ஒப்புகைச் சீட்டை வாக்குப் பெட்டியில் போடுதல் வேண்டும். அவற்றை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையைத்தான் இண்டியா கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளும், ஜனநாயக சக்திகளும் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.