நாட்டு மக்கள் இந்த ஆண்டு சிறந்த அரசியல் தீர்மானத்தை எடுத்தால் 10126 அரச பாடசாலைகளில் ‘ஸ்மார்ட் வகுப்பறை’ முறைமையை உருவாக்குவேன். அத்துடன் அரச பாடசாலைகளில் ஆங்கில கல்வியைக் கட்டாயமாக்குவேன். ஆங்கில கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொலன்னறுவை – சேவாமுக்த கதவுர மகா வித்தியாலயத்துக்கு தொழில்நுட்ப உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஆட்சியிலிருந்தவர்கள் அதிகாரத்துடன் தான் நாட்டுக்குச் சேவையாற்றினார்கள்.ஆனால் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றுகிறோம்.சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளுக்கு எவ்வித அரச நிதியும் பயன்படுத்தவில்லை.
சுகாதாரம், கல்வி ஆகியன நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.ஆகவே இந்த அடிப்படை உரிமைகள் மக்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.ஆனால் நாட்டின் கல்வித்துறையில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.
நாட்டில் உள்ள சகல அரச பாடசாலைகளிலும் வளப்பற்றாக்குகள் காணப்படுகின்றன. தேசிய பாடசாலைகளுக்கும், ஏனைய பாடசாலைகளுக்கும் இடையில் வளங்களுக்கு அடிப்படையில் பாரிய பற்றாக்குறை காணப்படுகிறது.கல்வி முறைமையில் பாரிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.தகவல் தொழில்நுட்ப பாடநெறியை முதலாம் தரத்திலிருந்து 13 ஆம் தரம் வரை கட்டாயப்படுத்த வேண்டும்.
சிங்களம் மற்றும் தமிழ் மொழிக்கு தாய் மொழி என்ற அடிப்படையில் மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்ததால் சர்வதேச மொழியான ஆங்கில மொழி புலமை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு.நாட்டு மக்கள் சிறந்த அரசியல் தீர்மானத்தை எடுத்தால் 10126 அரச பாடசாலைகளிலும் ‘ஸ்மார்ட் வகுப்பறை’ முறைமையை உருவாக்குவேன்.அத்துடன் அரச பாடசாலைகளில் ஆங்கில கல்வியை கட்டாயமாக்குவேன்.ஆங்கில கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நாடு என்ற அடிப்படையில் வங்குரோத்து நிலையடைந்துள்ளோம்.91 பில்லியன் டொலர் அரசமுறை கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது.ஏற்றுமதி பொருளாதாரத்தின் ஊடாகவே முன்னேற்றமடைய வேண்டும் அதற்கு தகவல் தொழினுட்பம் மேம்படுத்தப்பட வேண்டும்.
இந்த ஆண்டு தேசிய தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டு மக்களைத் தவறாக ஏமாற்றும் வகையில் ஒருதரப்பினர் பிரசாரங்கள் செய்கிறார்கள். மக்களை தவறாக வழி நடத்தும் தேசிய ஏமாற்று கொள்கையிலிருந்து விடுபடாமல் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 41 இலட்சத்துக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் பகல் உணவு இல்லாமல் பாடசாலைக்கு செல்கிறார்கள்.எமது அரசாங்கத்தில் சகல அரச பாடசாலைகளுக்கும் போசணை மிகுந்த மதிய உணவு வழங்குவோம் என்பதை உறுதியாகக் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.