தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான முள்ளிக்குளம், சிலாவத்துறை கடற்படை முகாம்களை அகற்றமுடியாது!

280 0

தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான முள்ளிக்குளம், சிலாவத்துறை கடற்படை முகாம்களை அகற்றமுடியாது என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.முள்ளிக்குளம் கடற்படை முகாமை அகற்றி அங்கே மக்களைக் குடியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும், சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி அங்கே மக்களைக் குடியேற்றவேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மானும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் அகற்றாது. ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தலையும், ஆட்கள் கடத்தப்படுவதையும் தடுப்பதற்கான கேந்திரமாக இந்தப் பகுதி உள்ளது. தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து கடற்படையினரை விலக்க முடியாது.

சிலாவத்துறையில் கடற்படையினரின் பயன்பாட்டில் தற்போது, சுமார் 34 ஏக்கர் காணிகள் உள்ளன. அவற்றில் சுமார் 6 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முள்ளிக்குளம் கடற்படை முகாமைப் பொறுத்தவரையில், அது அரசாங்க காணியிலேயே அமைந்துள்ளது. வட மேற்கு கடற்பகுதியில் போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்கு இந்த முகாம் முக்கியமானது.2012ஆம் ஆண்டு கடற்படை 500 ஏக்கர் காணிகளையும் அதற்குப் பின்னர் 252 ஏக்கர் காணிகளையும் மீள்குடியமர்வுக்காக விடுவித்துள்ளது.

பாடசாலை, தேவாலயம் என்பனவும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதி வழியாக போக்குவரத்துச் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் கடற்படை முகாம் அரச காணியிலேயே அமைந்திருப்பதால் அதனை அகற்ற வேண்டிய தேவை இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.