தூதரக பேச்சுவார்த்தை வெற்றி ; கத்தார் சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுவிப்பு

78 0

கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தையின் பலனாக அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கத்தாரின் அல் தஹாரா குளோபல் என்ற தனியார் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்த இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசாங்கம் கத்தார் நாட்டின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. விடுவிக்கப்பட்ட 8 பேரில் 7 பேர் இந்தியா  திரும்பியுள்ளனர். அவர்களை விடுவித்து இந்தியா திரும்புவதை சாத்தியப்படுத்திய கத்தார் அரசினை நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர், கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய அரசு தலையிட்டது. கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம், தூக்கு தண்டனையை சிறை தண்டனையாகக் குறைத்தது. தொடர்ந்து அவர்களை இந்தியா அழைத்துவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, துபாயில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான COP28 மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கத்தார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமாத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்த இந்த பேச்சுவார்த்தை மிகவும் நல்ல முறையில் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலன்களை பாதுகாப்பது குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

இந்நிலையில் இரு நாட்டு தூதரக பேச்சுவார்த்தைக்கான பலனாக இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி விமான நிலையம் வந்த முன்னாள் வீரர்களில் ஒருவர், “பிரதமர் மோடியின் தலையீடு இல்லாமல் நாங்கள் தாயகம் திரும்புவது சாத்தியப்பட்டிருக்காது. இந்திய அரசின் தொடர் முயற்சியினாலேயே நாங்கள் இங்கே இருக்கிறோம்” என்று நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.