ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும்

92 0

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினராக உள்ளன. மற்ற 10 நாடுகள் சுழற்சி அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு தற்காலிக உறுப்பினராக இடம்பெறும். அதன்படி இந்தியாவும் 2 முறை தற்காலிக உறுப்பினராக இடம்பெற்றுள்ளது.

கடந்த 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தொடர்ந்து 5 நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்தத் தீர்மானம் கொண்டு வந்தாலும், அதை ‘வீட்டோ’ அதிகாரம் மூலம்தடுக்கவோ அல்லது நிறைவேற்றவோ இந்த 5 நாடுகளால் மட்டுமே முடியும். இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுப்படுத்த வேண்டும் என்றுபல ஆண்டுகளாக பல நாடுகளும்வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாகஇந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோல் நேற்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஐ.நா. சபையை மறுசீரமைக்கவேண்டிய அவசியம் உள்ளது. அதன் கீழ் செயல்படும் ஏஜென்சிகளையும் மறுசீரமைக்க வேண்டும். குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும். உலகளவில் சமநிலையை மேம்படுத்த வேண்டுமானால் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தரவேண்டும். இதுதொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக பொறுப்பேற்று இந்தியாவும் தனது தகுதியை 2 முறை நிரூபித்துள்ளது. அத்துடன், ஜி20 அமைப்புக்கு தலைமையேற்று மிகச் சிறப்பாக செயலாற்றியது. உலக நாடுகளிடம் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை போக்கி ஒருமித்த கருத்து ஏற்படவும், சமரச தீர்வு ஏற்படவும் ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா திறம்பட செயலாற்றியது.

பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதித்துவம் ஏற்கெனவே அதிகமாக உள்ளது. தற்போதுள்ள யதார்த்தம் என்ன என்பதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கவுன்சிலை விரிவுப்படுத்த வேண்டும். அதில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

மேலும், ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் சிலவற்றையும் ஒருமித்த கருத் துடன் பாதுகாப்பு கவுன்சிலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளார்.