சந்தேக நபரைக் கைதுசெய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக்கொலை !

69 0

மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே ஞாயிற்றுக்கிழமை  (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (10) காலை, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட மோதலில் சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது, ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தரின் உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் தப்பிச் சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் லுனுகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.

பிங்கிரிய, பொலவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் உத்தியோகத்தருக்கு சொந்தமான துப்பாக்கி, ரவைகள் மற்றும் சந்தேக நபரின் முச்சக்கரவண்டி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவராவார்.

அத்துடன், சந்தேகநபரை மறைத்து வைப்பதற்கு உதவிய உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கம்பஹா மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.