சாய்ந்தமருது கடற்பரப்பில் இருந்து இயந்திரமின்றி பாரிய படகு மீட்பு

85 0

இயந்திரமின்றி இரண்டாக உடைந்த நிலையில் படகொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் கரைக்கு இழுத்துவரப்பட்டுள்ளது.

இந்த படகு, கடற்கரையில் நங்கூரமிட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும், அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இரண்டாக உடைந்து இயந்திரமும் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளது.

அதேவேளை, உடைந்து கடற்பகுதியில் காணப்பட்ட எஞ்சிய படகுப் பகுதிகள் கன ரக வாகனத்தின் உதவியுடன் கரைக்கு இழுத்தெடுக்கப்பட்டு வருகின்றன.

அக்கடல் பகுதியில் தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர், படகு உடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளதை  இனங்கண்டு ஏனையோருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்தே, பிரதேசவாசிகள் படகினை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

உடைந்த படகு கல்முனை பகுதியை நேர்ந்த மீனவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் பெறுமதியான இயந்திரம், வலைகள் உட்பட பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், குறித்த படகை கரைக்கு இழுத்து வரும்போது மீனவர்கள், குறித்த கடல் பகுதியில் எந்தவித கடற்சாதனங்களும் இல்லை என தெரிவிக்கின்றனர்.

இது தவிர அப்பகுதியில் கடுமையான கடலரிப்பு இடம்பெறுவதுடன், படகுகளை நிறுத்தி வைக்கக்கூடிய இறங்குதுறையின்றி மீனவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.