ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சரியான நபரை தெரிவு செய்யாவிட்டால் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் கனவு காண முடியாமல் போகும்

62 0

ஒக்டோபர் மாதம் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சரியான தீர்மானம் மேற்கொண்டு சரியான நபரை தெரிவு செய்யாவிட்டால் நாட்டின் எதிர்காலம் தொடர்பாக எமக்கு கனவு காண முடியாமல் போகும் எனஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை (11) யக்கல பிரதேச சபை  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாங்கள் இன்று தீர்மானமிக்க இடத்திலேயே இருக்கிறோம். இந்த வருடத்தை தேர்தல் வருடமாகவே நாங்கள் பார்க்கிறோம். ஒக்டோபர் மாதமாகும்போது எமக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும்.  அதன் பின்னர் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும். அதனைத்தொடர்ந்து மாகாண, உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். அதனால் கட்சி என்றவகையில் தற்போது இருந்தே அதற்காக தயாராக வேண்டும். மக்களின் தீர்மானத்துக்கமையவே நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். அதனால் நாட்டை எநத திசைக்கு கொண்டு செல்வது என்ற தீர்மானம் மக்களிடமே இருக்கிறது.

அத்துடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு எந்த நிலையில் இருந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.  நாங்கள் அனைவரும் வரிசைகளிலேயே இருந்தோம். அரசாங்க கணக்குகளில் ஒரு சதமும் இருக்கவில்லை.  அன்று வங்குராேத்து நாட்டை பொறுப்பேற்க எந்த தலைவரும் முன்வரவில்லை. எதிர்க்கட்சியில் இருக்கும் தலைவர்கள் அவர்களின் பொறுப்பில் இருந்து தப்பிச் சென்றார்கள். எமது தலைவர் மாத்திரமே முன்வந்தார். ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாலே  இந்த நாட்டிலே ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருக்கிறது.

மேலும் ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம் காரணமாகவே வங்குராேத்து நிலையில் இருந்து நாங்கள் வெளியில் வந்திருக்கிறோம். தீர்மானங்கள் எடுப்பதற்கு அவர் ஒருபோதும் பயப்பட்டத்தில்லை. சவால்களுக்கும் பயம் இல்லை அவ்வாறான ஒரு தலைவரே எமக்கு தேவை. இன்று போராட்டங்கள் இல்லாமல் நாடு ஸ்திர நிலைக்கு வரும்போது, அதிகாரத்தை எமக்கு வழங்கினால் நாங்கள் நாட்டை நிர்வகித்து காட்டுவதாக எதிர்க்கட்சி தெரிவித்து வருகிறது. அன்று சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் தப்பிச் சென்றவர்களே தற்போது அதிகாரத்தை கேட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த நாட்டை மீள கட்டியெழுப்புவதாக இருந்தால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிளவுபட்டுக்கொண்டு இந்த நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பஷ்டப்பட்டு வருவதை ஜனாதிபதி உணர்ந்துள்ளார்.

அதற்கு விரைவாக தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி தற்போது எடுத்துள்ளார். அதனால் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை தொடர்ந்து கொண்டு சென்றால் மாத்திரமே நாங்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமாகும்.  ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எடுக்கும் தீர்மானத்திலேயே அதன் முடிவு தங்கி இருக்கிறது. மக்கள் சரியான தீர்மானம் எடுத்து, சரியான நபரை ஜனாதிபதி ஆசனத்தில் அமரச்செய்தால் மாத்திரமே நாட்டின் எதிர்காலம் தொடர்பாக எமக்கு கனவு காணமுடியுமாகும் என்றார்.