போதைப்பொருள் அற்ற நாட்டை இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் உருவாக்குவோம். எதிர்காலத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இரண்டு மாதங்கள் சிறையில் வைத்திருந்து வெளியில் அனுப்பும் முறைமையை இல்லாமல் செய்வோம். அதற்கு பதிலாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, உழைத்த அவரது அனைத்து சொத்துக்களையும் அரச உடமையாக்கும் முறையை நடைமுறைப்படுத்துவோம் என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
போதைப்பொருள் அற்ற நிலையை இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் உருவாக்குவோம். போதைப்பொருளுடன் ஒருவர் அகப்பட்டதும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இரண்டு மாதங்கள் சிறையில் வைத்திருந்து வெளியில் அனுப்பும் முறைமைக்கு பதிலாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, அதன் மூலம் உழைத்த அவரது அனைத்து சொத்துக்களையும் அரச உடமையாக்கும் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தக் காலப்பகுதிக்குள் போதைப்பொருளினால் சம்பாதிக்கப்பட்ட 726 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டத்தின் கீழ் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டு வந்து, அவற்றை அரசுடமையாக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளோம்.
இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது எனக்கும், அமைச்சருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். நாட்டு மக்கள் பொலிஸாரை உற்சாகப்படுத்துங்கள்.
பிழைகள் செய்கின்ற மற்றும் குறைபாடுகள் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் காணப்படலாம். இந்நிலையில் இது தொடர்பில் விலகியிருந்தால் அல்லது கற்களை வீசினால், பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் குற்றவாளிகள் அதனை பயன்படுத்திக்கொள்வார்கள் என்றார்.