வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி போட்டி: ஏ.சி.சண்முகம் உறுதி

57 0

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேசிய அளவில் கூட்டணியைப் பலப்படுத்தி வரும் பாஜக, தமிழகத்தில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டியிடுகிறது. நாங்கள் 6 மாதங்களாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.தமிழகத்தில் குறைந்தது 20 தொகுதிகளில் தாமரை வெற்றி பெறும். மும்முனை போட்டியாக இருந்தாலும் வேலூர் கோட்டையில் தாமரை மலரும். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது. அதற்குள் மாற்றங்கள் வரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.