மதிமுக கேட்பது மொத்தம் மூன்று… அதில் துரை வைகோவுக்கு ஒன்று!

66 0

வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக 6 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை திமுகவிடம் மதிமுக வழங்கியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் மதிமுகவை சேர்ந்த ஏ.கணேச மூர்த்தி ஈரோடு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள், 2 மக்களவைத் தொகுதி, 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் எனவும் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும் கோரியிருந்ததாக தெரிவித்தனர்.

முன்னதாக 6 தொகுதி அடங்கிய விருப்பப் பட்டியலை திமுகவிடம் மதிமுக வழங்கியது. அதன்படி, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், மயிலாடு துறை, ஈரோடு தொகுதிகளிலும், சென்னையில் ஒரு தொகுதியிலும் போட்டியிட மதிமுக விருப்பம் தெரிவித்திருந்தது.

அதே நேரம், கட்சியின் அங்கீகாரம் தொடர்புடைய விஷயம் என்பதால் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்துக்கு திமுக தலைமை பெரியளவில் மறுப்பு கூறவில்லை என தெரிகிறது.

மேலும், தேர்தலில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவது உறுதி எனவும் தொகுதி பேச்சுவார்த்தை ஒரு வாரத்துக்குள் முடிவடையும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.