சந்திரிகாவின் தலைமையில் பொதுஜன ஐக்கிய முன்னணி ; கதிரை சின்னத்தில் பாரிய கூட்டணி

38 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முகங்கொடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் தலைமையில் பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரில் பரந்துபட்ட பாரிய கூட்டணியொன்று எதிர்வரும் ஜுன் மாதத்தில் அறிவிப்பதற்கு இரகசியமான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தக் கூட்டணியில் தலைமைத்துவ சபையொன்று உருவாக்கப்பட்டு அதன் தீர்மானத்துக்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளர் கதிரைச் சின்னத்தில் களமிறங்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இதன்முதற்கட்டமாக, கடந்தவாரத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு மாற்றம் தொடர்பில் நிறைவேற்றுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சம்பந்தமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் திஸர குணசிங்க தெரிவிக்கையில்,

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் பரந்த கூட்டணியுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளது. அத்துடன், பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு திருத்தத்தின் பிரகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமைத்துவ சபையில் 25சதவீத பிரதிநிதித்துவமும் செயற்குழுவில் 50சதவீத அதிகாரமும் கிடைக்கவுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய உறுப்பினர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, எமது கட்சியின் பொதுச் செயலாளராக புதிய உறுப்பினரொருவர் தெரிவு செய்யப்படவுள்ளார் என்றார்.

இதேவேளை, பொதுஜன ஐக்கிய மக்கள் முன்னணியை பரந்துபட்ட கூட்டணியாக ஸ்தாபிப்பது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியசுர முன்னணி, குமாரவெல்கம தலைமையிலான நவலங்கா சுதந்திரக்கட்சி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுடன் இரகசியமான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் அதன் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரையில் நேரடியாக பங்கேற்காத நிலையில் இரண்டாம் மட்டத்தலைவர்களே பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், நிமல்லன்சா உருவாக்கிவருகின்ற புதிய கூட்டணியின் முக்கியஸ்தரான அநுரபிரியதர்சன யாப்பாவும் மேற்படி கலந்துரையாடல்களில் முக்கிய பிரதிநிதியாக பங்கேற்று வருகின்றார்.

மேலும், டலஸ் அழகப்பெருமவின் அணியிலிருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கலாநிதி.நாலக்க கொடஹேவா ஆகியோர் வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள நிலையில், பேராசிரியர் சன்ன ஜயசுமானவும் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ள நிலையில், டலஸ் இப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர்களைத் தவிர, ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள உறுப்பிர்கள் சிலர் தனி நபர்களாக பங்கேற்றுள்ளதோடு, உத்தரலங்கா உள்ளிட்ட சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட்டணியை உருவாக்கும் கலந்துரையாடலில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பணிகள் எதிர்வரும் ஜுனுக்கு முன்னதாக நிறைவடையவுள்ளதோடு, ஜுன் மாதத்தில் இந்த பரந்துபட்ட கூட்டணியை வெளிப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ள அத்துடன், குறித்த கூட்டணியில் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் உள்ளடக்கிய தலைமைத்துவ சபையொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதோடு அந்த தலைமைத்துவ சபையே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இறுதியாக தீர்மானிக்கும் என்றும், அச்சபைக்கு தலைமைதாக்கி வழிநடத்தும் பொறுப்பினை சந்திரிகாவே கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இதுவரை எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சகர காரியவசம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.