பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேரடியாக பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள போதிலும், கம்பனிகள் தான்தோன்றித் தனமாகவே செயற்படுகின்றன.
எனவே தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆகக் குறைந்த அடிப்படை சம்பளம் 1700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பில் கடந்த டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலாளிமார் சம்மேளனத்துக்கு நேரடியாக பணிப்புரை விடுத்திருந்தார்.
எவ்வாறிருப்பினும் இதுவரையில் இவ்விடயம் தொடர்பில் எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை. இது குறித்து வினவிய போதே வடிவேல் சுரேஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலாளிமார் சம்மேளனத்துக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ள இரு மாதங்களாகியுள்ளன. ஆனால் இவ்விடயத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் தான்தோன்றித் தனமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எனவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதனை பாராளுமன்றத்திலும் வலியுறுத்தியிருக்கின்றோம்.
இன்றைய வாழ்க்கை செலவுக்கு ஏற்ற வகையில் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த போது, இரு வருடங்களுக்கொருமுறை சம்பளம் அதிகரிக்கப்பட்டது. சம்பள நிர்ணய சபையின் ஊடாக அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதன் பின்னர் 3 ஆண்டுகளாகியும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனவே இவ்விடயத்தில் இனியும் பொறுத்திருக்க முடியாது. கம்பனிகள் தொழிலாளர்கள் குறித்து சிந்தித்து தீர்மானமொன்றை எடுக்கும் அதேவேளை, இவ்விடயத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு அரசாங்கத்துக்கும் இருக்கிறது.
எனவே தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். கம்பனிகளை சம்பள நிர்ணய சபைக்கு அழைத்து தீர்வினை வழங்க வேண்டும். அல்லது மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்கு செல்ல வேண்டும். மக்களின் வேலைப்பழுவை அதிகரிக்காமல் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.