கிழக்கில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்: தமிழரசின் மத்திய குழுவை கூட்டும் முயற்சி கைவிடப்பட்டது

95 0

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டத்தினை கூட்டும் முயற்சி கைவிடப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை மீளத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தலைவர் சிவஞானம் சிறீதரனிடத்தில் கையளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் முதலாம் நாள் அமர்வு கடந்த 27ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்றபோது மத்திய செயற்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய நிருவாகத்துக்காக முன்மொழியப்பட்ட அங்கத்தவர்களை ஏற்றுக்கொள்வது தொடர்பிலான வாக்கெடுப்பு பொதுச்சபையில் நடத்தப்பட்டது.

புதிய நிருவாகத்துக்கு ஆதரவாக 112 வாக்குகளும், எதிராக 104வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வாக்கெடுப்பின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொதுச்சபை உறுப்பினர்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கே அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

இந்நிலையில், கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் கடந்தவாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து அதிருப்திக்குள்ளான உறுப்பினர்களுடன் உரையாடியிருந்ததோடு இன்று (11) வவுனியாவில் கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டி இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வினை எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

எனினும், உத்தியோக பூர்வமாக மத்தியசெயற்குழுவினைக் கூட்டுவதில் சட்டச்சிக்கல்கள் காணப்படுகின்றமையால் உத்தியோகப்பற்றற்ற வகையில் கிழக்கு மாகாண அங்கத்தவர்களை அழைத்து சந்திப்பதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பை இன்றயதினம் நடத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றபோதும், சிங்கப்பூருக்கு தனிப்பட்ட விஜயமாகச் சென்றுள்ள கட்சியின்  முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடமிருந்து அதற்கான உறுதிப்பாடுகள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வாக்குறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை மையப்படுத்தி கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மீளத் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றபோது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் வகையில் மஜரொன்று தயாரிக்கப்பட்ட கிழக்கு மாகாண உறுப்பினர்களிடத்தில் கையெழுத்துக்களைப் பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த மகஜரை புதிய தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கு அடுத்து வரும் நாட்களில் அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணத்தில் உள்ள கட்சியின் முக்கிஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.