தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கினால் பொருளாதாரம் முன்னேற்றமடையும்

67 0

தமிழ் தேசிய இனத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் எவ்வாறு முன்னேற்றமடைய முடியும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிங்கள தலைவர்கள் முன்வர வேண்டும். எமக்கான தீர்வு கிடைத்தால் தான் ஒன்றிணைந்து செயற்பட முடியும்.தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை  வழங்கினால் பொருளாதாரம் முன்னேற்றமடையும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  உரையாற்றுகையில்,

நாட்டின் முதல் பிரஜையான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடன உரையில் அடிப்படை  பிரச்சினைகளுக்கான  தீர்வு குறிப்பிடப்படவில்லை.குறிப்பாக எட்டு  தசாப்தமாக இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ஏதும் பேசாமல் இருந்தமை தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.குறிப்பாக சமாதானத்தின் கதவுகள் இலங்கையில் மிக இறுக்கமாக மூடப்பட்டுள்ளன.

இலங்கையில் அரச தலைவர்கள் காலம் காலமாக ஏமாற்றியுள்ளார்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு  இலங்கையின் அரச தலைவர்கள் பல்வேறு தரப்பினருடன் ஒப்பந்தங்கள் கைத்திச்சாட்டமை அவற்றை செயற்படுத்தாமல் இருந்ததை இன்றும் அரச தலைவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இனங்களுக்கிடையில் சமாதானம் மற்றும் ஒற்றுமையை உறுதிப்படுத்தாமல் பொருளாதாரத்தை முன்னேற்றுவது குறித்து பேசுவது எந்தளவுக்கு சாத்தியமடையும் என்பது தெரியவில்லை.

இந்த நாட்டில் கிட்டத்தட்ட பல பில்லியன் கணக்கான   கடன்கள் உண்டு என ஆளும் தரப்பின் உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த கடன்களை அரசாங்கம் ஒருபோதும் திருப்பிச் செலுத்தாது. முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சி காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாண விவசாயிகளின் சுய பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஊன்று கோலாக அமைந்தது. விவசாயிகள் முன்னேற்றமடைந்தார்கள். ஆனால் 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மூடிய பொருளாதார கொள்கையை இரத்து செய்து திறந்த பொருளாதார கொள்கையை அமுல்படுத்தியது.இதனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது.

நாட்டின் தேசிய உற்பத்தி  பொருளாதாரம் இல்லாமல் போய், இறக்குமதி பொருளாதாரத்துக்கு தஞ்சமடைய நேரிட்டு இன்று உலக  நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கடன் பெற்று எவ்வாறு  நாட்களை நகர்த்தலாம் என்பதில் மாத்திரமே அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.பாக்கிஸ்தான்,எத்தியோப்பியா  போன்ற நாடுகளின் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் புரைபோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரச தலைவர்கள் இதய சுத்தியுடன் செயற்படவில்லை என்பதை காலம் உணர்த்தியுள்ளது. குறிப்பாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் யுத்த வெற்றி அமோகமாக கொண்டாடப்பட்டது.அரகலய போராட்டத்துக்கு பின்னர் தான் இந்த நாடு அடிமட்ட பொருளாதார நிலையில் உள்ளது என்பதை சிங்களவர்கள் புரிந்துக் கொண்டுள்ளார்கள்.

நாட்டை விட்டுச் செல்வதற்கு தான் இன்று இலங்கையர்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள்.மக்களின் மனங்கள் வெறுப்படைந்துள்ளது.நாட்டின் தலைவர்கள் சரியாக செயற்படவில்லை. அடுத்த தலைமுறையினருக்கு நம்பிக்கை வழங்கும் வகையில் அரச தலைவர்கள் பொறுப்புடன் செயற்படவில்லை. யுத்தத்தை காரணம் காட்டி ஆயுதம் கொள்வனவு செய்வதற்கும், இராணுவத்தை  பலப்படுத்தவும் கடன் பெறப்பட்டது. அதன் விளைவு இன்று தாக்கம் செலுத்தியுள்ளது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதில் தமிழர் தேசத்தின் கண்ணீருக்கு பதில் கிடைக்கவில்லை.இந்த நாட்டின்  அடிப்படை பிரச்சினைகளை முதலில் அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிடப்படுகிறது.ஆனால் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கும்,தமிழர்களின் காணிகளை அபகரிப்பதற்கும் மாத்திரம் நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழ் தேசிய இனத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் எவ்வாறு முன்னேற்றமடைய முடியும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிங்கள தலைவர்கள் முன்வர வேண்டும். எமக்கான தீர்வு கிடைத்தால் தான் ஒன்றிணைந்து செயற்பட முடியும்.தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை  வழங்கினால் பொருளாதாரம் முன்னேற்றமடையும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.