வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி உடல் நலக் குறைவு ஏற்பட்டு தனது 72வது வயதில் இன்று சனிக்கிழமை (10) அதிகாலை காலமானார்.
அல்வாய் தெற்கைச் சேர்ந்த அவர், ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும், இடைநிலை கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியிலும் கற்று யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைப் பட்டதாரி ஆனார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக இணைந்து கலைப்பீட விரிவுரையாளர் ஆனார்.
மேலும், உயர் கற்கைகளை மேற்கொண்டு கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்ட அவர், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றினார்.
கலை இலக்கியத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், காத்தவராயன் உள்ளிட்ட பல இதிகாச புராண நாடகங்களை தயாரித்தும் நடித்தும் மேடையேற்றியுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இவரது ஒரு மகனான பரணிதரன் கடந்த சில ஆண்டுகளாக ஜீவநதி எனும் இலக்கிய மாத சஞ்சிகையினை வெளியிட்டு வருகிறார்.
கலாமணியின் தந்தையார் தம்பிஐயா புகழ்பூத்த அண்ணாவியார் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.