யாழில் பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை!

119 0

யாழ்ப்பாணத்தில் பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியின் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கீனம், பொலிஸாரின் பற்றாக்குறை காரணமாகவும் கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடியதாலும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது.

மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்ட போதும் நிலைமை கட்டுங்கடங்காது சென்றது. கதிரை, தண்ணீர் தாங்கி உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாகின. நேற்றிரவு நிகழ்ச்சியின்போது பலரும் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையின் விடுவிக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஒருவர் மயக்கமுற்றதுடன் பலரும் காயமடைந்தனர். தற்போதைய நிலையில் மூன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 25,000 ரூபா அனுமதிச் சீட்டு, 7,000 ரூபா அனுமதிச் சீட்டு, 3,000 ரூபாய் அனுமதிச் சீட்டு என கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்நதும் அதன்பின்னே இலவசமாக நின்றவாறும் இசைநிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.

பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந் நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன், தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்து நெருக்கடி ஏற்பட்டது.

ஒழுங்குபடுத்தப்பட்ட பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை காரணமாக குழப்பத்தில் முடிந்தது.