விசும்பாய முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகையை விட குறைவாக வழங்கப்படவில்லை

54 0

ரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகைக்குக் குறைவான விலைக்கு விசும்பாய கட்டடம் முதலீட்டாளர்களுக்கு ஒருபோதும் வழங்கப்படாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகிறார்.

அத்தோடு, அவர், அரச மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீட்டை விட குறைவான தொகையை விசும்பாய முதலீட்டாளருக்கு வழங்கக்கூடாது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபையின் தீர்மானமும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

8 பில்லியன் ரூபாய் பெறுமதியான விசும்பாய, முதலீட்டாளருக்கு வழங்கல் தொடர்பில் அரசாங்கம் மதிப்பீடு செய்தபோதிலும், அதனை முதலீட்டாளர் ஒருவருக்கு 4 பில்லியன் ரூபாய்க்கு வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இவ்வாறான உரையாடல் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

“நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான விசும்பாயவை முதலீட்டுக்காக வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன் மதிப்பு 8 பில்லியன் ரூபாய். 8 பில்லியன் மதிப்புள்ள விசும்பாயவை இப்போது 4 பில்லியனுக்கு விற்க முயற்சிக்கிறது. அதற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மதிப்பீட்டை பொருட்படுத்தாமல் குறைந்த விலையில் பங்குகளை விற்க தனித் தரகர்கள் குழு முயற்சிக்கிறது. செத்சிறிபாய, சுவசிறிபாய, சவ்சிறிபாய, இசுருபாய போன்ற அரச கட்டடங்கள் ரணசிங்க பிரேமதாசவின் காலத்திலேயே உருவாக்கப்பட்டன. இதை விற்பனை செய்வதிலிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?”

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

“அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகையை விட குறைவாக விசும்பாயவை யாருக்கும் வழங்க நாங்கள் தயாராக இல்லை. அப்படி வழங்குவதற்குரிய அவசியமும் எங்களுக்கில்லை என்று கூறுவதற்கு நாங்கள் பொறுப்பு.

ஒரு முதலீட்டாளர் வந்து ஒரு பட்டய மதிப்பீட்டாளர் மூலம் தனது முன்மொழிவுடன் கோரிக்கை வைத்தார். அதை முன்வைத்தபோது, பட்டய மதிப்பீட்டாளர் கொடுத்த தொகையும், எங்கள் மதிப்பீட்டுத் திணைக்களம் கொடுத்த தொகையும் இப்படி மூன்று மடங்கு.

அரச மதிப்பீட்டின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வழங்கப்பட்ட பட்டய மதிப்பீட்டாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதை மீண்டும் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று அந்த முதலீட்டாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.

விசும்பாயவை எங்களால் அபிவிருத்தி செய்ய முடியாது. எனவேதான், இந்த விவகாரத்தில் அரச மதிப்பீட்டுத் திணைக்களத்துக்குக் கொடுத்து இது தொடர்பாக உரையாடி, இதை தீர்க்குமாறும் கேட்டுக்கொண்டோம். அதன்படி, முதலீட்டாளருக்கு மேலும் 6 மாதங்கள் நீட்டித்துள்ளோம். அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீடு இல்லாமல் செய்ய முடியாது என நிர்வாக சபை தீர்மானம் எடுத்துள்ளது.”

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

“நீங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக நான் சொல்லவில்லை. ஆனால் இது உங்களுக்கு தெரியாமல் விசும்பாய மோசடி  நடவடிக்கையாக இருக்கலாம். அதைப் பற்றி பிறகு விரிவாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

இவ்வாறு குறிப்பிட்டனர்.