அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தின் ஆக்ஸ்போர்டு டவுன்ஷிப் (Oxford Township) பகுதியில் உள்ளது ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளி.2021 நவம்பர் மாதம், இப்பள்ளியில் 15-வயது ஈதன் ராபர்ட் க்ரம்ப்லி (Ethan Robert Crumbley) எனும் மாணவன், 9 மில்லிமீட்டர் செமி-ஆட்டோமேடிக் கைத்துப்பாக்கியால் தாறுமாறாக பலரை சுட்டான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.காவல்துறையினரால் ஈதன் கைது செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளில் அவன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2022 அக்டோபர் மாதம், நீதிமன்றத்தில் ஈதன் தனது குற்றத்தை ஒப்பு கொண்டான்.2023 டிசம்பர் மாதம், பரோலில் வெளியே வரமுடியாதபடி ஈதனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.மேலும், ஈதனின் தாய் மற்றும் தந்தை ஆகியோரும் இக்குற்றத்திற்கு மறைமுகமாக உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.விசாரணைக்கு அவர்கள் வராமல் தப்பியதால், நீண்ட தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை நிறைவுற்று, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.12 உறுப்பினர்களை கொண்ட ஜூரி 10 மணி நேரத்திற்கும் மேல் விவாதித்து முடிவு எட்டப்பட்ட இந்த தீர்ப்பில், ஈதனின் தாயார் ஜெனிஃபர் க்ரம்ப்லி (45), ஈதன் கைக்கு கிடைக்காதவாறு துப்பாக்கியை பாதுகாப்பாக வைத்து கொள்ள தவறியதே உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என்பதால் அவர் குற்றவாளிதான் என தீர்ப்பானது.இதையடுத்து, ஏப்ரல் 9 அன்று அவரது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்.குறைந்தது 15 வருட தண்டனையாவது ஜெனிஃபருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க பள்ளிகளில் மாணவர்கள் நடத்தும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் இதுவரை பெற்றோருக்கு பொறுப்பு உள்ளதாக நீதிமன்றங்கள் கூறி வந்த நிலையில் முதல்முறையாக மாணவனின் தாய்க்கும் தண்டனை வழங்கப்பட்டது விவாத பொருளாக மாறியுள்ளது.விசாரணையின் போது, “தங்கள் குழந்தைகள் ஈடுபடும் அனைத்து செயல்களுக்கும் பெற்றோர் எவ்வாறு பொறுப்பாக முடியும் ” என ஜெனிஃபர் தரப்பு வழக்கறிஞர் ஷெனன் ஸ்மித் கேள்வி எழுப்பினார். ஆனால், அவரது கேள்வி புறக்கணிக்கப்பட்டது.வரும் மார்ச் மாதம், ஈதனின் தந்தை ஜேம்ஸ் க்ரம்ப்லி மீது வழக்கு விசாரணை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.