இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழக கிளை தேர்தலை 4 மாதங்களில் நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

47 0

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தேர்தலை 4 மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என ஆளுநர் நியமித்த தற்காலிக குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் நிர்வாக குளறுபடி, முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ வழக்க பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், நிர்வாக குழுவின் தலைவர் பதவி விலகினார். இதையடுத்து, சங்கத்தை நிர்வகிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தலைமையில் தற்காலிக குழுவை நியமித்து கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

குழுவின் 6 மாத பதவிக்காலம் முடிந்த நிலையில், மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தாததால், சங்கத்தின் செயல்பாடுகள் முடங்குகிறது. இதை தவிர்க்கும் வகையில் தற்காலிக குழு தொடர்ந்து செயல்பட உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில நிர்வாகக் குழுவின் பதவி காலத்தை ஓராண்டுக்கு மேல் நீட்டிக்க முடியாது. எனவே, நிர்வாகிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என ஆளுநரால் நியமிக்கபட்ட தற்காலிக குழுவுக்கு உத்தரவிட்டனர்.

தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்தெடுக்கும் வரை சங்கத்தின் கணக்குகளை நிர்வகிப்பது, அன்றாடப் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் கொள்கை முடிவு ஏதும் எடுக்கக் கூடாது என ஆளநர் நியமித்த தற்காலிக குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.