கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் – சுவாமிநாதன்

259 0
முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கேப்பாபுலவில் காணி விடுவிப்பு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் பற்றி அறிந்துகொண்டிருப்பதுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.
கேப்பாபுலவு காணி விடுவிப்பு குறித்து முன்னாதாக அமைச்சர் விடுத்திருந்த அறிவிப்பில், 468 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதில் 189 ஏக்கர் காணி, மீள்குடியேற்ற அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சுக்கு 5 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.