மக்களவை தேர்தல் பணிக்காக தமிழக தேர்தல் துறையில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்

47 0

மக்களவை தேர்தல் பணிக்காக, தமிழக தேர்தல் துறையில் ஒரு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி, 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வுசெய்து வருகிறது. அந்த வகையில்,தேர்தல் ஆணைய துணை ஆணையர் அஜய் பாது, தேர்தல் ஆணைய செயலர் மல்லே மாலிக் ஆகியோர் சென்னையில் கடந்த 6, 7-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தினர். முதல் நாளில் காவல்,வருமான வரி, வருவாய் புலனாய்வு,சுங்கத் துறை, மத்திய பாதுகாப்புபடையினருடனும் 2-வது நாளில்,மாவட்ட தேர்தல் அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர். தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் தமிழகத்தில் விரைவில் ஆய்வு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், மக்களவை தேர்தல் நேரத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உதவுவதற்காக 3 அதிகாரிகளை நியமிப்பது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதை ஏற்று, அதிகாரிகளை நியமிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனாவுக்கு தேர்தல் ஆணைய செயலர் ராகுல் சர்மா கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ‘தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரியான சங்கர்லால் குமாவத், இணை தலைமை தேர்தல்அதிகாரிகளாக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு ஐஏஎஸ் அதிகாரி ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வாக்காளர் விழிப்புணர்வு பிரிவுக்கு பி.அரவிந்தன் ஆகியோரை நியமிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.