காணி உரிமை வழங்கும் திட்டத்தை மலையக பிரதேசத்துக்கும் விஸ்தரிக்க வேண்டும்

78 0

அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் காணி உரிமை வழங்கும் திட்டத்தை மலையக பிரதேசத்துக்கும் விஸ்தரித்து, மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய வம்சாவளி மக்களாகிய மலையக மக்கள் கடந்த 200 வருடங்களாக பாடுபட்டு வந்த சமூகமாகும்.

ஆனால் இந்த மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தீவிரவாதத்துக்கோ நாட்டை அழிப்பதற்கோ செயற்பட்டதில்லை என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். ஆனால் அந்த மக்கள் கவனிப்பு, அவர்களுக்கான வீடமைப்பு, காணி உரிமை, தொழில்வாய்ப்புகள், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் பல குறைபாடுகளுக்கு மத்தியிலே  வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

நாட்டுக்காக உழைத்துவரும் அந்த மக்களை கெளரவிக்கும் தார்மிக உரிமை, இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களுக்கும் இருக்கின்றன. ஆனால் அதனை செய்ய தவறி இருக்கின்றன. எதிர்காலத்திலாவது இதனை சரி செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தற்போது உரிமம் என்ற பாரியதொரு வேலைத்திட்டத்தை காணி அமைச்சர் முன்னெடுத்திருந்தார். இதனை தேசிய மயப்படுத்தி மலையகத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும். மலையக மக்களின் காணி உரிமையும் வழங்கப்பட வேண்டும்.

எனவே காணி உரிமை சம்பந்தப்பட்ட விடயங்கள் முழுமையாக மலையக மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.  அதன் மூலமே இந்த வேலைத்திட்டம் முழுமை பெறும்.

இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தை பார்த்துக்கொண்டிருக்காமல் இலங்கை அரசாங்கம் அந்த மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்துக்கே அந்த மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

அத்துடன் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளம் போதுமானதல்ல. அதனால் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பெருந்தோட்ட கம்பனிகளை அழைத்து ஜனாதிபதி அதுதொடர்பில் அறிவுறுத்தி இருக்கிறார்.

அதனால் பெருந்தோட்ட கம்பனிகள் ஜனாதிபதியின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டு, ஊழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.