கிரீஸ் நாட்டின் நிலையே இலங்கைக்கு ஏற்படும்

59 0

சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைகளை செயற்படுத்திய காரணத்தால் தான் கிரீஸ் வங்குரோத்து நிலையில் இருந்து மீளவில்லை என்பது சர்வதேச மட்டத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்தியுள்ள இலங்கைக்கு கிரீஸ் நாட்டின் நிலையே ஏற்படும் என கிரீஸ் நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் யானீஸ் வரூஃபாகிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியலமைப்பு ரீதியிலான முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்  சரித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் மற்றும் பரிந்துரைகளை தவிர்த்து நாட்டுக்கு பொருத்தமான எவ்வித திட்டங்களையும் ஜனாதிபதி தனது கொள்கை உரையில் குறிப்பிடவில்லை. பாரிய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுவது அடிப்படையற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்து 14 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மூன்று தடவைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளார். இரண்டு வரவு செலவுத் திட்டங்களை சமர்ப்பித்துள்ளார். ஆனால் எவ்வித மாற்றமும் சமூக கட்டமைப்பில் ஏற்படவில்லை.

பொருளாதார நெருக்கடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி பேசுகிறார்.

ஆளும் தரப்பினரும் அதனை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் மொத்த கடன் 91 பில்லியன்  டொலர் என்று குறிப்பிடுகிறார். இதில் பெரும்பாலான பகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்த போது பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் ,கடன் சுமை என்பன ஜனாதிபதிக்கு சங்கீத கதிரை போட்டி போன்றது.

பொருளாதார பாதிப்பு தொடர்பில் உரையாற்றிய ஜனாதிபதி  கிரீஸ் நாட்டை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைகளை செயற்படுத்திய காரணத்தால் தான் கிரீஸ் வங்குரோத்து நிலையில் இருந்து மீளவில்லை என்பது சர்வதேச மட்டத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்தியுள்ள இலங்கைக்கு கிரீஸ் நாட்டின் நிலையே ஏற்படும் என கிரீஸ் நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் யானீஸ் வரூஃபாகிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியலமைப்பு ரீதியிலான முரண்பாடுகளையும் ஜனாதிபதி தோற்றுவிக்கிறார். பிரதமராக இருக்கும் போது சிறந்ததாக இருந்த அரசியலமைப்பு பேரவை , ஜனாதிபதியான பிறகு முறையற்றதாக காணப்படுகிறது. ஆகவே அரசியலமைப்பு ரீதியிலான முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டாம் என்பதை ஜனாதிபதியிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளேன் என்றார்.