உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களைப் புறக்கணித்தே நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மீறல் செயற்பாட்டுக்குச் சபாநாயகர் துணை சென்றுள்ளார். சட்டத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை நீதியமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆகவே விசேட கட்சித் தலைவர் கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் தான் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் 11,16,19,20 ,27 உள்ளிட்ட சரத்துக்கள் உட்பட பெரும்பாலான சரத்துக்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் அத்துடன் 16 மற்றும் 19 ஆவது சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் யோசனைகளை முன்வைத்துள்ளது.
சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைக்கும் யோசனைகளை முறையாகச் செயற்படுத்த வேண்டியது பாராளுமன்றத்தின் கடமையாகும்.ஆனால் அரசியலமைப்புக்கும்,உயர்நீதிமன்றத்துக்கும் அப்பாற்பட்ட வகையில் ஆளும் தரப்பினரது ஆதரவுடன் இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மீதான நம்பிக்கை மலினப்படுத்தப்பட்டுள்ளது.அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாட்டுக்குச் சபாநாயகர் சிம்மாசனத்தில் அமர்ந்தவாறு ஒத்தாசை வழங்கியுள்ளார். சட்டமூலம் மீதான இறுதி விவாதத்தின் போது நாங்கள் வாக்கெடுப்பு கோரினோம்.ஹெட்செட்டை காதில் அணிந்து கொண்டு எதிரணியினர் குறிப்பிடுவது கேட்காதது போல் இருக்கும் புதிய பழக்கத்தைச் சபாநாயகர் தற்போது கடைப்பிடிக்கிறார்.
இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் செயற்படுத்தப்பட்டதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. என்னைத் தொடர்புப்படுத்தாதீர்கள் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், சட்டமூலம் மீதான இறுதி விவாதம் இடம்பெற்ற போது நீங்கள் தான் சபைக்குத் தலைமை தாங்கினீர்கள்,அரசியலமைப்பு மீறல் செயற்பாட்டுக்கு நீங்கள் பொறுப்புக் கூற வேண்டும்.
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை நீதியமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.ஆகவே உடனடியாக விசேட கட்சித் தலைவர் கூட்டத்தை ஏற்பாடு செய்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள் இந்த சட்டத்தில் பாரதூரமான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை திருத்தம் செய்யுங்கள் என்றார்.