ஜனாதிபதி தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் முயற்சி

58 0

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி தேர்தல் பற்றி குறிப்பிடப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் யோசனையை முன்வைத்து, ஜனாதிபதி தேர்தலை ஒருவருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

ஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்டு விட்டு, பாராளுமன்றத்துக்குள் வந்து எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பு கோருவதற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் ஆற்றிய  சிம்மாசன பிரசங்கத்தை செவிமெடுத்து, வாத பிரதிவாதங்களை முன்வைத்தோம்.ஆனால் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொள்கை பிரகடனத்தை நாங்கள் புறக்கணித்தோம்.ஜனநாயகத்துக்கு எதிரான ஜனாதிபதியின் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இந்த போராட்டத்தின் மீது அரசாங்கம் வன்மையான முறையில்  தாக்குதல்களை மேற்கொண்டது. எதிர்க்கட்சித் தலைவர் மீதும் தாக்குதல்கள்  மேற்கொள்ளப்பட்டன.வரலாற்றில் இவ்வாறான நிலை ஒருபோதும் இடம்பெறவில்லை.

ஜனநாயக போராட்டத்தின் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு விட்டு,பாராளுமன்றத்துக்குள் வந்து ‘எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் ‘ என  ஜனாதிபதி உரை நிகழ்த்துவதற்கு வெட்கமில்லையா ?

நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் 40 இற்கும் அதிகமான வரிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காலனித்துவ ஆட்சியின் போது  அமுல்படுத்தப்பட்ட சரீர வரிகள் ஊடாக எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படலாம்.தொழில் இல்லாத இளைஞர்கள் கூட வருமான வரி இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுவது நகைப்புக்குரியது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால்  2022.04.12 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சதம் கூட வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படவில்லை. ஜனாதிபதியின் கொள்கை உரையில் ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசப்படவில்லை.அரசியலமைப்புக்கு அமைய இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சமடைந்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போடுவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை நிச்சயம் தோற்கடிப்போம்.

எதிர்க்கட்சிகளின் ஆதரவை ஜனாதிபதி கோருகிறார். இவர்களுக்கு ஆதரவு வழங்கினால் எமக்கும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு சர்வதேசம் ஆதரவு வழங்காது. ஆகவே அட்டை பூச்சிப் போல் ஒட்டிக் கொண்டு இருக்காமல் தேர்தலை நடத்துங்கள்.தமக்கான அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துக் கொள்வார்கள் என்றார்.