பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை கேள்விக்குள்ளாக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு கிடையாது. நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் ஒருசில குறைபாடுகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
இதற்காக முழு சட்டத்தையும் தீயிலிட முடியாது. பாராளுமன்றத்தின் ஊடக திருத்தங்களை கொண்டு வரலாம் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற அமர்வின் போது உயர்நீதிமன்றத்தின் திருத்த யோசனைகளுக்கு அப்பாற்பட்டு நிகழ்நிலை காப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஆகவே விசேட கட்சித் தலைவர் கூட்டத்தை நடத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிரணியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். இதன்போது எழுந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
சட்டமியற்றல் தொடர்பில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும் சட்ட வரைபின் அரசியலமைப்பின் வகிபாகத்தை சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியதன் பின்னர் தான் சட்டவரைபு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் முதல் வாசிப்புக்கு சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்தை 14 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 45 இற்கும் அதிகமான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்கள் முறையான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அரசாங்கம் சார்பில் சட்டமா அதிபர் பல திருத்தங்களை முன்வைத்தார். அதற்கமைய சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பல அறிவுறுத்தல்களை முன்வைத்திருந்தது.
உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு,குழு நிலை வேளையின் போது திருத்தம் செய்யப்பட்டது.
பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் தொடர்பில் கேள்வி கேட்கும் உரிமை உயர்நீதிமன்றத்துக்கு கிடையாது.
தயாரிக்கப்படும் சட்டமூலங்கள் அரசியலமைப்புக்கு முரணா? அல்லது முரணனற்றதா என்பதை பரிசீலனை செய்யும் அதிகாரம் மாத்திரமே உள்ளது.
அரசியலமைப்புக்கு முரணான ஒரு சரத்து காணப்படுமாயின் அதனை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்,பொதுஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் அறிவிக்கும்.
நிகழ்நிலை காப்புச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இதில் ஒருசில குறைப்பாடுகள் காணப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
இதற்கான முழு சட்டத்தையும் தீயிட முடியாது. திருத்த யோசனைகளை முன்வையுங்கள் பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு காணலாம்.எந்த சட்டத்தையும் குறைப்பாடுகள் இல்லாமல் இயற்ற முடியாது.
நிகழ்நிலை காப்புச் சட்டம் ஒன்றும் அவசரமாக கொண்டு வரப்படவில்லை. 2016 ஆம் ஆண்டு நீதிச்சேவை ஆணைக்குழு ஊடாக சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு, சிங்கப்பூர் நாட்டில் உள்ள 11 சமூக வலைத்தளங்களின் முகவர்களுடன் பேச்சுசவார்த்தை இடம்பெற்றது.
சுய ஒழுக்க கட்டுப்பாட்டு கோவையை சமூக வலைத்தளங்களில் அறிமுகப்படுத்துவதாக சமூக நிறுவனங்கள் குறிப்பிட்டன.
ஆனால் வழங்கிய வாக்குறுதிகளை சமூக நிறுவனங்கள் நிறைவேற்றாத காரணத்தால் தான் நிகழ்நிலை காப்புச் சட்டம் சுய ஒழுக்க கோவையை முன்னிலைப்படுத்தி இயற்றப்பட்டது என்றார்.