ஆர்.கே.நகர் தொகுதியில் தகவல் தொழில்நுட்ப கல்லூரி உருவாக நடவடிக்கை எடுப்பேன்: டி.டி.வி.தினகரன்

261 0

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளராக கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் டி.டி.வி. தினகரன் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் தொகுதியில் வலம் வந்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அம்மா ஆட்சியின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி தொப்பி சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

வேட்பாளர் டி.டி.வி.தினகரன் கொருக்குபேட்டை பகுதியில் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், துரோகிகளால் இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் நீங்கள் எனக்கு தொப்பி சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வதன் மூலம் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பேன். இத்தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன். இந்தியாவிலேயே முன்மாதிரி தொகுதியாக ஆர்.கே.நகரை விளங்க செய்வேன்.

துரோகிகள் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். அவற்றை இத்தொகுதியில் வென்று முறியடித்து காட்டுவேன். ஓ.பன்னீர்செல்வத்தின் கூடாரம் காலியாகி வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் தோல்விக்கு பின்னர் அவரது ஆட்டம் முடிவுக்கு வரும். சென்னையை காலி செய்து விட்டு பெரியகுளத்துக்கு ஓடி விடுவார்.

துரோக கூட்டத்தினர் தேர்தல் கமி‌ஷனில் என் மீது புகார் கொடுத்துள்ளனர். அதற்கு உரிய விளக்கம் அளிப்பேன்.

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களின் மேற்படிப்புக்காக தகவல் தொழில் நுட்ப கல்லூரி உருவாக பாடுபடுவேன். தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அவற்றை உடனுக்குடன் செய்து கொடுப்பேன். அம்மாவின் ஆசி பெற்ற எனக்கு தொப்பி சின்னத்தில் வாக்களித்து வெற்றியடைய செய்யுங்கள். உங்கள் கனவை நனவாக்க அல்லும் பகலும் அயராது பாடுபடுவேன். எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு அனைத்து இடங்களிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் மாடிகளில் நின்று மலர்களை தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் தொப்பி அணிந்து கொண்டு ஊர் வலமாக சென்று தொப்பி சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தனர்.வேட்பாளர் தினகரனுக்கு அனைத்து இடங்களிலும் தாரை தப்பட்டை, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.