குஜராத் அமுல் பாலுற்பத்தி நிறுவனத்துக்கு அநுர தலைமையிலான குழுவினர் விஜயம்

42 0

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் புதன்கிழமை (07) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஆனந்தில் அமைந்துள்ள அமுல் பாலுற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திச் செயற்பாட்டினை பார்வையிடுதலை உள்ளடக்கிய வெளிக்கள சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் உள்ளிட்ட நிறுவனத்தின் முகாமைத்துவ குழுவினர், தேசிய பால் உற்பத்திச் சபையின் தலைவர் உள்ளிட்ட பால் உற்பத்தித் துறையின் நிபணர்கள் குழுவுடன் பால் உற்பத்தியின் புத்தம் புதிய நிலைமைகள் பற்றியும் கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.

நிறுவனத்தின் சொத்துவமும் முகாமைத்துவமும்  கூட்டுறவுக் கட்டமைப்பின் கீழ் இயங்கி வருகிறது.

இதன்போது பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் உற்பத்திகளின் விலைகளை குறைத்துக்கொள்ளல், உற்பத்தி வினைத்திறனை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தின் உச்ச  அளவிலான பாவனை போன்ற விடயங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், அவர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் பற்றியும் தற்போது தோன்றியுள்ள சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பல்வேறு சிக்கலான நிலைமைகள் பற்றியும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் முகாமைத்துவ குழுவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குஜராத்தின் அபிவிருத்தி மாதிரி பற்றிய சமர்ப்பண நிகழ்வின்போது குஜராத் அரசாங்கத்தின் வலுச்சக்தி மற்றும் கனிய உற்பத்தி திணைக்களத்தின் பிரதம செயலாளர் Mamta Verma, கைத்தொழில் மற்றும் அகழ்வுத் திணைக்களத்தின் மேலதிக பிரதம செயலாளர்  S.J. Haider, காந்தி நகரத்தின் the Leela ஹோட்டலின் பொது முகாமையாளர் Vikas Sood  ஆகியோர் கலந்துகொண்டனர்.

உட்கட்டமைப்பு வசதிகள், தொழில்முயற்சி வசதி, வலுச்சக்தித் துறை, வெளிநாட்டு வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.