முல்லைத்தீவு உப்புமாவெளியில் கடற்கரை வீதியை புனரமைக்க கோரும் மக்கள்

68 0

முல்லைத்தீவு உப்புமாவெளியில் உள்ள 4ம் கட்டை சுடலை வீதியை (கடற்கரை) புனரமைத்து தருமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணமுள்ளனர்.

இடைவிடாது தொடர்ந்து பல தரப்பினருடனும் தங்கள் கோரிக்கையை முன்வைத்து வீதிப்புனரமைப்புக்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆய்வுப் பணிகளில் உரிய தரப்பினர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் இதுவரை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.வீதியை மூடிய வெள்ள நீர் பாதையின் இரண்டு இடங்களில் பயனங்களுக்கு இடையூறை ஏற்படுத்தியவாறு இருக்கின்றன.

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் முல்லைத்தீவில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ள 4 ம் கட்டைச் சந்தியில் இருந்து கிழக்கே கடற்கரை நோக்கிய பாதையாக இது இருக்கின்றது.

முல்லைத்தீவில் இருந்து ஆரம்பமாகும் தெற்குநோக்கிய கடற்கரைச் சாலையை இது இணைத்து கரையோரப் பயனங்களுக்கு உதவியாக அமையுமாறு தளவமைப்பினை இந்த பாதை கொண்டுள்ளது.

ஒரு கிலோ மீற்றரிலும் சற்றுக் கூடிய நீளத்தினைக் கொண்டுள்ள இந்த பாதை மக்களிற்கு அவசியமானதாக அமைந்து விடுகின்றது.

இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான சுடலைக்குச் செல்லும் பாதையாக இது இருக்கின்றது.உடுப்புக்குளம், உப்புமாவெளி, துண்டாய் வடக்கு , அளம்பில் தெற்கு,கொத்தியகாமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களைக்கான சுடலைக்குச் செல்லும் பிரதான பாதையாக இது அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.துண்டாய் வடக்கு கிராமத்திற்கு வடக்கு திசையில் அமையவிருக்கும் புதிய குடியிருப்புக்கான பாதையாகவும் இந்த பாதையே அமைந்துள்ளது. புதிய குடியிருப்புக்கான வீட்டுத் திட்டங்களின் போது அதற்கான கட்டிடப் பொருட்களை கொண்டு செல்வதும் மற்றும் மக்களின் பயணங்களும் இந்த பாதைவழியே தான் மேற்கொள்ள வேண்டும் என உடுப்புக்குளம் அபிவிருத்திச் சங்கம் சார்பாக பேசவல்ல சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்தன் குறிப்பிட்டிருந்தார்.

புதிய குடியிருப்புக்கான நிலங்களை வழங்குவதற்கு இந்த பாதைவழியே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய நிலத்தொகுதியே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உப்பாமாவெளி கிராமசேவகர் குறிப்பிட்டிருந்தார்.

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியின் 4ம் கட்டை சுடலை வீதி பல்நோக்கு அடிப்படையில் அதிக பயன்பாடுமிக்க வீதி என்பதும் அது புனரமைக்கப்பட வேண்டும் என்பதும் உரிய எல்லாத் தரப்புக்களாலும் உணரப்பட்டுள்ள விடயமென கிராமத்தின் சமூக விடய ஆய்வாளரும் எழுத்தாளருமான ஒருவரிடம் மேற்கொண்ட கருத்துக் கேட்டல்களின் போது குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.

ஒரு கிலோமீற்றரிலும் சற்றுக்கூடிய நீளம் கொண்ட இந்த பாதையில் பாதித் தூரத்திற்கும் கூடிய தூரம் மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாது போய்விடுகின்றது.

உப்புமாவெளி வில்லுக்குளத்தில் சேரும் நீர் வில்லின் கொள்ளளவிலும் அதிகரிக்கும் போது வீதியை மேவி பயணம் செய்ய முடியாதபடி வீதியை மூடிக் கொள்கின்றது.

2023 ஆம் ஆண்டில் மாரிகாலத்தில் ஏற்பட்ட கடும் மழைப்பொழிவினால் நாலடிக்கும் கூடிய உயரத்திற்கு; 600 மீற்றர் தூரத்திற்கு நீர் பாதையை மேவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மழையில் சேர்ந்த வெள்ளம் இன்னுமும் பாதையின் 75 மீற்றர் தூரமளவிற்கு பாதையை மூடியுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.

பாதையின் உயரத்தினை இன்னும் அதிகமாக்க வேண்டும்.அப்போது தான் மழைக்காலங்களில் வில்லுக்குளத்தில் நீர் அதிகரிக்கும் போது பாதையை வெள்ளம் மூடாதிருக்கும் என உப்புமாவெளி கிராமசேவகர் பாதையின் தற்போதைய நிலைபற்றிக் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.

இறந்தவர்களின் உடலங்களை தகனத்திற்காகவும் நல்லடக்கத்திற்காகவும் தண்ணீரூக்குள்ளாலேயே கொண்டு செல்ல நேர்ந்ததாக சமூகச் செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த மாதத்தில் மூன்று முதியவர்கள் நோய் மற்றும் மூப்பின் காரணமாக இறப்பினைச் சந்தித்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கிராம அபிவிருத்தி சார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூட்டாக இணைந்து கிராம சேவகரின் வழிகாட்டலுக்கமைய செயற்பட்டுவருவதாக கிராம மக்களிடையே மேற்கொண்ட தேடல்களின் போது அறிய முடிகின்றது.

பலதடவை கரைதுறைபற்று பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு இந்த பாதை தொடர்பில் கொண்டு சென்றுள்ளதாக கிராம சேவகரும் கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களின் கவனத்திற்கும் இந்தப் பாதையின் புனரமைப்புத் தொடர்பில் முன்கொண்டு சென்றுள்ளதாகவும் யாரிடமிருந்தும் உறுதியான அபிவிருத்திக்கான உடன்பாடு இதுவரையும் பெறமுடியவில்லை எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

விரைவான புனரமைப்பை எதிர்ப்பார்க்கும் மக்கள் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக பாதையின் உயரத்தினை உயர்த்தி பாதையில் உள்ள பாலங்களை அகலமாக்கி புதிய கட்டமைப்பை உருவாக்கி பாதையை புனரமைப்பதற்கு முயன்று கொண்டிருந்த போதும் இதுவரையும் அவர்களால் அந்த முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உப்புமாவெளி கிராம சேவகர் பிரிவினால் உடுப்புக்குளம், உப்புமாவெளி, துண்டாய் வடக்கு ஆகிய கிராமங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை நோக்கத்தக்கது.

உடுப்புக்குளம் பாடசாலையில் இருந்து அளம்பில் வடக்கு நோக்கிய ஒரு கிலோமீற்றர் நீளமான பாதையும் மிகவும் கடுமையாக சேதமாகி பயணம் செய்யமுடியாதபடி இருக்கின்றது.

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் 4 ம் கட்டை சந்தியில் இருந்து ஆரம்பமாகும் நரசிங்கர் கோவில் வீதியின் இரண்டு கிலோமீற்றர் தூரமுள்ள பாதையும் புனரமைப்புக்குரியதாக இருக்கின்றது. இந்த பாதையின் சிறிது தூரம் உடுப்புக்குளம் குளத்தின் நீரால் மேவப்பட்டு பயணிக்க முடியாதபடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கரைதுறைபற்று பிரதேச செயலகத்தினால் பல வருடங்களாக இந்த பாதைகளின் அபிவிருத்தி தொடர்பில் கவனமெடுக்கப்படாது இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என அந்த பாதைகளை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் தங்கள் ஆதங்கங்ளை தெரிவித்திருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.