பாகிஸ்தான் முழுவதும் இணையதள சேவை நிறுத்தம்?

50 0

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில், மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தற்போது நடைபெற்று வரும் காபந்து அரசு நினைக்கிறது.இதனால் உள்துறை மந்திரி கோஹர் இஜாஸ், அச்சுறுத்தல் காரணமாக நாடு தழுவிய அளவில் செல்போன் சேவையை தடைசெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும், மாவட்டம் அல்லது மாகாண நிர்வாகத்திடம் இருந்து பாதுகாப்பு அச்சுறத்தல் தொடர்பாக வேண்டுகோள் வந்தால், அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.ஆனால், அரசு சாரா பல்வேறு அமைப்புகள் தேர்தலின்போது தடையில்லா இணைய சேவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.

இந்த நிலையில் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம், பொதுத்தேர்தலில் மக்கள் சிரமமின்றி வாக்களிக்க தொடர்ந்து இணைய தள சேவை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், இன்டர்நெட் சேவையை தற்காலிகமாக நிறுத்து வைக்க வேண்டும் என அரசிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றார்.

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள்.நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் கட்சி, பெனாசீர் பூட்டோ மகன் கட்சி ஆகியவை பொதுத்தேர்தலில் பலப்பரீட்சை நடத்துகின்றன.