14+1… இது பிரேமலதாவின் கூட்டணி கணக்கு!

52 0

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மறைந்த, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்த பிரதமர், விஜயகாந்த் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்த தமிழக அரசு உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியது: நடந்து முடிந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் தனித்து களம் காண வேண்டும் என்னும் கருத்தை பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்தனர்.

அதேநேரம், 2014-ம் ஆண்டைப் போலவே 14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதையே மாவட்டச் செயலாளர்கள் இறுதி முடிவாக தெரிவித்துள்ளனர்.

யாருடன் கூட்டணி என்பதை இன்றிலிருந்தே சிந்திக்க உள்ளோம். இதுவரை அதிகாரப்பூர்வமாகவோ மறைமுகமாகவோ கூட்டணி தொடர்பாக யாரிடமும் பேசவில்லை. விஜயபிரபாகரன், சுதீஷ், நான் என தேர்தலில் போட்டியிட வேண்டியோர் குறித்தும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தொகுதிகளின் எண்ணிக்கையும் முக்கியம். கொள்கை ஒத்துப்போகிறது என்பதற்காக ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்குவோம் என்றால் யாராவது ஒப்புக் கொள்வார்களா? தேமுதிகவின் கொள்கையை கட்சி தொடங்கியபோது தலைவர் விஜயகாந்த் தெளிவாக வரையறுத்து அறிவித்தார். அதன் அடிப்படையில் செயல்படுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.