ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் புதன்கிழமை ( 7) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வாறு ஜனாதிபதியால் கொள்கை விளக்கவுரை நிகழ்த்தப்பட்ட போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையிலிருந்து வெளியேறினார்.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா உள்ளிட்ட பலர் சபையிலேயே அமர்ந்திருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, குமார வெல்கம, இஷாக் ரஹ்மான், வடிவேல் சுரேஷ், பைசால் காசிம், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும் சபையிலிருந்து வெளியேறவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினரான சம்பிக ரணவக்கவும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்தார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ரீதியில் தீர்மானித்திருந்த போதிலும், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அந்த தீர்மானத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை செவிமடுத்தவாறிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற தேநீர் உபசாரத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.