கம்பஹாவில் தம்பதியினரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கார் கொள்ளை ; 8 பேர் கைது

60 0

கம்பஹா – யக்கல பிரதேசத்தில் காரில் இருந்து பானம் அருந்திக்கொண்டிருந்த இளம் தம்பதியினரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர்களது காரை கொள்ளையிட்டுச்சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற சில மணி நேரத்திற்குள் சந்தேக நபர்கள் மக்கனிகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் கொள்ளை சம்பவத்துக்காக பயன்படுத்தியதாக கூறப்படும் வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கலகெடிஹென பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினர் கம்பஹா – மஹாவிட  பிரதேசத்தில் உள்ள பானம் விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் இருந்து பானம் அருந்திக்கொண்டிருந்த போது வேனில் வந்த சந்தேக நபர்கள் சிலர் குறித்த தம்பதியினரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர்களது காரை கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் சாரதியின் மனைவியின் கைத்தொலைபேசியை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் குறித்த காரின் ஜி.பி.எஸ் கைத்தொலைபேசியில் இருக்கலாம் என சந்தேகித்து அவர்கள் அதனை சேதப்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும் குறித்த காரின் ஜி.பி.எஸ் சாரதியின் கைத்தொலைபேசியில் இருந்ததால் இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.