ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.நாட்டை கட்டியெழுப்பும் திட்டங்கள் எம்மிடம் உள்ளன என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை 2022 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்துகிறோம்.சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உண்மைத் தன்மையுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள்.எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
நாட்டின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது. ஆனால் சமூக கட்டமைப்பு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கி எதனையும் சாதிக்க முடியாது. நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாட்டை கட்டியெழுப்பும் திட்டங்கள் எம்மிடம் உள்ளன என்றார்.