அழிவடைந்த நாடு தற்போது உயிர் பெற்றுள்ளது : முன்னேற்றத்தைச் சீர்குலைக்க கூடாது

44 0

அழிவடைந்த நாடு தற்போது உயிர் பெற்றுள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள  வேண்டும்.  சந்திரிக்காவின் ‘ வெள்ளை  அலரி’ அமைதி மாநாட்டுக்கு சென்றவர்கள், மஹிந்தவின் இனவாத செயற்பாட்டுக்கும் சென்றார்கள். அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனக்கு எதிராக  ஏன் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற ஜனாதிபதி கொள்கை பிரகடன உரையை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் புறக்கணித்து ,ஜனாதிபதி  சபைக்கு வந்தவுடன் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சபையிலிருந்து வெளியேறினார்கள். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன ஆகியோர் சபையிலிருந்து வெளியேறவில்லை.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதிகளின் கொள்கை பிரகடன உரையை நான் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. அதனை அரசியல் கலாச்சாரமாகக் கடைப்பிடிக்கிறேன். அழிவடைந்த நாடு தற்போது உயிர் பெற்றுள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போதைய முன்னேற்றத்தை சீர்குலைக்க நான் விரும்பவில்லை.

முதலில் நாடு, இரண்டாவது அரசியல் கட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு நான் செயற்படுவேன். கடந்த காலங்களிலும் அவ்வாறே செயற்பட்டுள்ளேன். கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நான் செயற்படவில்லை. அவ்வாறான நிலையில்  எனக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்  ‘வெள்ளை அலரி’ அமைதி மாநாட்டுக்கு சென்றவர்கள்,மஹிந்தவின் இனவாத  செயற்பாடுகளுக்கு சென்றார்கள். அவர்கள் தற்போது எதிரணியில் உள்ளார்கள். இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார்.